வட்ஸ்அப் செயலியில் பணம் அனுப்பும் வசதி | தினகரன்


வட்ஸ்அப் செயலியில் பணம் அனுப்பும் வசதி

வட்ஸ்அப் செயலியில் பணம் அனுப்பும் வசதி-WhatsApp Launch Digital Payment

பேஸ்புக் நிறுவனம் குறுஞ்செய்திச் சேவை வழங்கும் வட்ஸ்அப் செயலியில் மின்னிலக்கக் கட்டண வசதியை அறிமுகம் செய்துள்ளது.

முதலில் பிரேசிலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அந்த வசதி, நாளடைவில் உலகெங்கும் விரிவுபடுத்தப்படலாம். பிரேசிலில் உள்ளவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் திறன்பேசிகளில் உள்ள வட்ஸ்அப் செயலியைக் கொண்டு மற்றவர்களுக்குப் பணம் அனுப்பலாம், பொருட்கள் வாங்கலாம் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது.

இந்த வசதி வட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துவோருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், வர்த்தக நிறுவனங்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ள தரகுக் கட்டணம் செலுத்தவேண்டும்.

அது கடன்பற்று அட்டைப் பரிவர்த்தனைக்கு இணையான கட்டணமாக இருக்கும்.

வட்ஸ்அப்பின் மின்னிலக்கக் கட்டண வசதி, நிறுவனங்களுக்கு மேலும் வசதியளிக்கும் என்று பேஸ்புக் நம்புகிறது.

கடன் பற்று அட்டை, ரொக்கக் கழிவுஅட்டை ஆகியவற்றைக் கொண்டு வட்ஸ்அப்பில் பணம் செலுத்தலாம். தனிப்பட்ட கடவு எண் அல்லது விரல் ரேகையைப் பயன்படுத்தி அந்தக் கட்டணத்தைச் செலுத்தலாம்.

உலகெங்கும் வட்ஸ்அப் செயலியை மாதந்தோறும் சுமார் ஒன்றரை பில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்துவதாக மதிப்பிடப்படுகிறது.


Add new comment

Or log in with...