ராஜித இரு சரீரப்பிணைகளில் விடுதலை

முன்னாள் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்ட வெள்ளைவேன் ஊடக சந்திப்பு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது  'செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவை தலா ஐந்து இலட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீரப்பிணையில் விடுவிக்கும் உத்தரவை கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே வழங்கினார்.

பிணை வழங்கும் உத்தரவை பிறப்பித்து மேலதிக நீதிமன்ற நீதிபதி கருத்துத் தெரிவித்த போது,

கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி ராஜிதவை கைது செய்யும் பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் கைதாவதை தவிர்க்கும் பொருட்டு அவர் தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்காக சேர்ந்ததன் மூலம் அவர் நீதிமன்றத்தைத் தவிர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டாரென மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தவறான செயற்பாட்டுக்காக சந்தேக நபரை காலவரையறையின்றி தடுத்துவைக்க முடியாதென்பதால் பிணை வழங்க முடிவு செய்யப்பட்டது.

சந்தேக நபருக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்று கூட பிணை வழங்கும் சட்டத்தை மீறுவதாகக் காணப்படவில்லை. இதன்படி சரீரப்பிணையில் விடுதலை செய்வதாக நீதிபதி தெரிவித்தார்.

இதேவேளை நேற்று நீர்கொழும்பு தளுபத்தை இளம் குற்றவாளிகள் சீர்த்திருத்த சிறைச்சாலையில் தனிமைப்படுத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில் தளுபத்தை இளம் குற்றவாளிகள் சீர்த்திருத்த சிறைச்சாலையிலிருந்து சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதிமன்றத்திற்கு பிணையில் விடுதலை செய்வதற்காக நேற்று அழைத்துச் செல்லப்பட்டார்.

நேற்று பிற்பகல் 1.20 மணியளவில் சிறைச்சாலை பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார். இதேவேளை, ராஜித சேனாரத்னவின் மகனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சத்துர சேனாரத்ன சிறைச்சாலை முன்பாக தனது தந்தை விடுதலையாகி வரும் வரை காத்திருந்தார்.

அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில். 28 தினங்களுக்குப் பிறகு ராஜித்த என்ற அரசியல் சிறை க்கைதிக்கு பிணை வழங்கபட்டதற்காக நீதிமன்றத்தற்கு தலை வணங்குவதாக தெரிவித்தார். நாட்டு மக்கள் ராஜிதவின் விடுதலைக்காக வீதியில் இறங்கி போராடியதாகவும், வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும், நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்காக ஜனவரி 8 ஆம் திகதிய போராட்டம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எம். ஏ. எம். நிலாம், நீர்கொழும்பு நிருபர்


Add new comment

Or log in with...