'த பினான்ஸ்' வைப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை (UPDATE)

- ஞாயிற்றுக்கிழமை முதல் தலா ரூபா 6 இலட்சம் கொடுப்பனவு
- நிதி நிறுவனங்களின் வைப்புத் தொகையில் ரூபா 6 இலட்சத்திற்கே மத்திய வங்கி உத்தரவாதம்

‘த பினான்ஸ்’(The Finance) நிறுவனத்தின் வைப்பாளர்களுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) முதல் நாடு முழுவதிலுமுள்ள 60 மக்கள் வங்கிக் கிளைகள் ஊடாக, தலா 6 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் பந்துல குணவரதன தெரிவித்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

குறிப்பிட்ட 'த பினான்ஸ்' கிளைகள் காணப்படுகின்ற பிரதேசத்திற்கு மிக அருகிலுள்ள மக்கள் வங்கிக் கிளைகள் ஊடாக இக்கொடுப்பனவுகள் வழங்கப்படும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக நிலுவைகள் ஏதாவது இருப்பின், த பினான்ஸ் கம்பனிக்கு சொந்தமான சொத்துக்களை ஏலத்தில் விடுவதன் மூலம் பின்னர் செலுத்தப்படலாம் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கியால் இந்நோக்கத்திற்கான முகவர் வங்கியாக நியமிக்கப்பட்ட மக்கள் வங்கி ஊடாக இழப்பீட்டுக் கொடுப்பனவுக்ள மேற்கொள்ளப்படும் என மத்திய வங்கி மேலும் அறிவித்துள்ளது.

இதற்கான கொடுப்பனவுகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளதோடு, கொடுப்பனவுகளின் முதற்கட்டம் தனிநபர் ஒரே கணக்காக பேணும் வைப்பாளர்களுக்கு வழங்கப்படும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை கீழுள்ள தொலைபேசி இலக்கங்கள் வழியாக அறிந்து கொள்ள முடியும்.

இலங்கை மத்திய வங்கி, 0112-398788, 0112-2477261 மக்கள் வங்கி - 0112-481594, 0112-481320, 0112-481612, 0112-481703

இதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கான அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். The Finance நிறுவனத்தின் அனைத்து வைப்பாளர்களுக்கும் தலா 6 இலட்சம் ரூபா வரை வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்படவுள்ளதாக பந்துல குணவர்தன கூறினார்.

மத்திய வங்கியினால் இந்த விடயம் தொடர்பில் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டதற்கு அமைய 97வீதமான வைப்பாளர்களின் பிரச்சினை முழுமையாக தீர்த்து வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த தொகையை விட அதிக நிதியை வைப்பிலிட்ட 3 வீதமானவர்கள் உள்ளதாகவும் அவர்களின் பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கான இயலுமை தற்போது இல்லை எனவும் அவர்களுக்கான தீர்வும் விரைவில் வழங்கப்படும் எனவும் தெளிவுபடுத்தினார்.

இதேவேளை, ETI நிறுவனத்தில் வைப்பிலிட்டவர்களுக்கான நிதியை மீள செலுத்துவதற்கான நடவடிக்கை இந்த செயற்றிட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதில் வைப்பிலிட்டவர்களுக்கு தலா 6 இலட்சம் ரூபா கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், அதன் வைப்பாளர்களின் சங்கம் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் அதில் தலையீடு செய்ய முடியாதுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் காணப்படும் எந்தவொரு நிதி நிறுவனத்திலும் அதிகபட்சமாக 6 இலட்சம் ரூபா மாத்திரமே வைப்பிலிடுவதற்கு மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளதாக அவர் கூறினார். இதனால், நிதி நிறுவனங்களில் பணத்தை வைப்பிலிடுவோர் தங்களின் பாதுகாப்பிற்கான விடயங்களை அறிந்துகொள்வதோடு அதிகபட்சம் 6 இலட்சம் ரூபா வரை மாத்திரமே வைப்பிலிட முடியும் என்பதை அனைத்து வைப்பாளர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.


Add new comment

Or log in with...