பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையால் அருகிச் செல்லும் பிரம்புக் கைத்தொழில்!

“பிரம்புத் தொழிலைச் நம்பித்தான் எங்களது குடும்ப சீவியம் நடந்தது. ஆனால் முன்னர் போன்று பிரம்பு உற்பத்திப் பொருட்கள வாங்குவதற்கு இப்போது ஆட்கள் குறைவு. தற்போது கொரோனாவினால் எங்களது பிரம்புத் தொழிலும் அடிபட்டுப் போய் விட்டது”.

இவ்வாறு கூறுகிறார் மட்டக்களப்பு மண்முனைப்பற்றிலுள்ள புதுக்குடியிருப்பைச் சேர்ந்த  சாந்தினி என்ற பெண். இவர் பிரம்புக் கைப்பணிப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருபவர்.

“எங்களைப் போல இப்படித் தொழில் செய்து வாழ்க்கை நடத்துவோர் இப்போது அன்றாட சீவியத்துக்கு சிரமப்படுகின்றனர். இப்போது டிசைன் டிசைனாக பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன. அவற்றின் பாவனை அதிகரித்து விட்டது. அதனால் எங்களின் தொழில் பாதிக்கப்பட்டு விட்டது. எமது மக்கள் இயற்கையில் இருந்து செயற்கைக்கு மாறி வருகின்றனர்.  எங்களின் பிரம்புக் கைத்தொழிலை ஊக்குவிக்க ஆளில்லை” என்று வேதனையுடன் கூறுகிறார் அவர்.

“அரசாங்கம் எங்களைப் போல குடிசைக் கைத்தொழில் செய்வோருக்கு  ஏதாவது உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும்”என்றும் கூறுகிறார்    சாந்தினி.

ஒரு காலத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள பின்தங்கிய கிராமங்கள் தோறும் குடிசைக் கைத்தொழிலான பிரம்புக் கைத்தொழில் கொடிகட்டிப் பறந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, வவுணதீவு, வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, பட்டிப்பளை, வெல்லாவெளி ஆகிய இடங்களில் பிரம்பினால் தயாரிக்கப்பட்ட உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து பலர் சீவியம் நடத்தி வந்தனர். இன்று அத்தொழில் படிப்படியாக அருகி வருகின்றது.

அக்காலத்தில் பிரம்பினால் உற்பத்தி செய்யப்படும் பெட்டி, மரைக்கால், சுளகு, தொட்டில், கதிரை, கூடை,  இடியப்பத் தட்டு, கதிரைகள், அலங்காரப் பொருட்கள், பிள்ளைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் என்பன ஏராளமாகும். அவற்றை விதம் விதமாக அழகாக உற்பத்தி செய்தார்கள். மக்களும் அவற்றை அதிகமாக கொள்வனவு செய்தார்கள். இன்று பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளதால் மக்கள் அவற்றை வாங்கிச் செல்கின்றனர். இதனால் நீண்ட காலமாக பிரம்புக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய குடிசைக் கைத்தொழிலான பிரம்புத் தொழிலை செய்து வந்த பலர் அதனைக் கைவிட்டு வேறு தொழிலை நாடிச் செல்கின்றனர்.

பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையால் சுற்றுப்புறச் சூழலுக்கும், மனிதனுக்கும் கேடு ஏற்படும் என்று கூறப்படுகின்ற போதிலும், மக்கள் பிளாஸ்டிக்கிலான பொருட்களை நுகர்வதிலே ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக பிரம்பு போன்ற குடிசைக் கைத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மிக நீண்ட காலமாக பிரம்புக் கைத்தொழிலில் ஈடுபட்டு வரும்   மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பைச் சேர்நத் சுவேந்திரன் என்பவர் இப்படிக் கூறுகின்றார்.

“பிரம்புத் தொழிலைச் செய்வதற்கு இப்போது ஆட்களுமில்லை. அதனை பழகுவதற்கு ஒருவரும் முன்வருவதுமில்லை. இயற்கைக்கு பாதிப்பில்லாத பிரம்புத் தொழிலை ஊக்குவிக்கவேண்டும். பொலித்தீன் பாவனையை ஒழிப்போம், பிளாஸ்டிக் பாவனையை ஒழிப்போம் என்று கோஷம் எழுப்பினால் மட்டும் போதாது. அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். எங்கள் புதுக்குடியிருப்பு கிராமத்தில் குடிசைக் கைத்தொழிலாக பிரம்பு பொருட்கள் உற்பத்தியில் மக்கள் ஈடுபட்டார்கள். இங்கு உற்பத்தியாகும் பொருட்கள் யாழ்ப்பாணம், கண்டி, காலி மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. இன்று எமது தொழில் போய் விட்டது. இன்று அந்தத் தொழிலை  கைவிட்டு விட்டனர்.ஒருசிலர் மட்டும்  அதை தொடர்ச்சியாகச் செய்து வருகிறார்கள். இவர்களை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும். மானியமாக தொழிலுக்குரிய வசதி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். பிரம்பு கைத்தொழிலுக்கான பயிற்சிகளை இளைஞர், யுவதிகளுக்கு வழங்கவேண்டும். அதற்குரிய வசதிகள் எல்லாம் எங்களின் கிராமத்தில் இருக்கின்றன”. 

அருகி வரும் பாரம்பரிய குடிசைக் கைத்தொழில்களுக்கு புத்துயிர் அளிப்பதன் மூலம் எமது பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் விரைந்து எடுக்கவேண்டும். எமது நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இன்றும் கூட பிரம்பினாலான தொப்பிகள், கைப்பைகளை  விரும்பி வாங்கிச் செல்கின்றனர். சுற்றலாப் பயணிகளைக் கவரக் கூடிய வகையில் குடிசைக் கைத்தொழில்களை விருத்தியடையச் செய்ய வேண்டும். அதன் மூலம் பிரம்பு கைத்தொழில் உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரிக்கச் செய்யலாம்.

இவ்வாறு அந்தத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று பிரம்புக் கைத்தொழிலில் ஈடுபடுபவர்களின் வாழ்வாதாரத்தையும் முற்றாகப் பாதித்துள்ளமை மற்றொரு வேதனையாகும்.

செ.துஜியந்தன் - பாண்டிருப்பு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...