கொரோனாவை உரிய முறையில் கட்டுப்படுத்திய நாடு இலங்கை

‘கொரோனா பரவல் அச்சுறுத்தலின் ஆபத்தை நன்கு புரிந்து கொண்டு சரியான நடவடிக்கைகள் எடுத்த நாடு இலங்கை ஆகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்ட பொருத்தமான நடவடிக்கையின் பயனாகவே கொரோனாவின் பாரிய ஆபத்தில் இருந்து எமது நாடு பாதுகாக்கப்பட்டது’ என்கிறார் அநுர பிரியதர்ஷன யாப்பா. இருபத்தைந்து வருடங்களாக தொடர்ந்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்து வந்தவர் அநுர பிரியதர்ஷன யாப்பா. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர், ஊடகம் உள்ளிட்ட பல அமைச்சுகள் ஆகிய பொறுப்புகளை வகித்தவர் அவர். குருநாகல் மாவட்டத்தின் அரசியல் முதிர்ச்சி வாய்ந்தவரான சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாப்பா எமக்கு பேட்டியொன்றை வழங்கினார்.

கேள்வி: கொவிட் 19 தொற்றினால் உலகில் வளர்ச்சியடைந்த நாடுகள் கூட திணறின. அவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கை அதனை முகாமைத்துவம் செய்த விதத்தை எவ்வாறு நோக்குகிறீர்கள்?

பதில்:  எமது நாட்டில் இந்நோயைக் கட்டுப்படுத்த எடுத்த விசேட நடவடிக்கையாக  நான் கருதுவது அதன் பரவலை கட்டுப்படுத்தியமையாகும். ஜனாதிபதி  சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை சரியான முறையில், சரியான நேரத்தில் செயல்படுத்தினார்.  நாம் அதில் ஐரோப்பாவை விட மிகவும் முன்னணியில் இருந்தோம். ஐரோப்பாவில் முடக்கம் வெற்றியளிக்கவில்லை. அவர்கள் அதனை காலம் தாழ்த்தியே செய்தார்கள். அவ்வேளையில் சமூகத்தில் நோய்த் தொற்று அதிகரித்திருந்தது. இலங்கையில் நோய்த் தொற்று சமூகத்தில் ஏற்படவில்லை. நாம் தற்போது நோய்த் தொற்றின் ஆரம்ப  விதை எங்கே உள்ளது என அறிந்து கொண்டுள்ளோம். இந்நோயை அறிந்து கொள்ளல், கட்டுப்படுத்தல் என்ற விடயங்களில் நாம் முன்னணியில் உள்ளோம். இந்நிலைமை சர்வதேச ரீதியில் பாராட்டப்பட்டுள்ளது.

கேள்வி:  நாட்டில் மக்களுக்கு பல நன்மைகள் கிடைத்துள்ள வேளையில் எதிர்க் கட்சியினர் அதைக் கண்டும் காணாதது போல் இருப்பதையும் ஏளனப்படுத்துவதையும் நீங்கள் எவ்வாறு காணுகிறீர்கள்?

பதில்: இலங்கையிலுள்ளது பக்குவமடைந்த எதிர்க் கட்சியல்ல. அவர்கள் நாட்டின் பிரச்சினையை சரியாக அறிந்து கொள்ளவில்லை. எந்தவொரு பிரச்சினையினதும் உண்மையான  நிலைமையை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. அவர்கள் அதிகாரத்தில் இருந்திருந்தால் இன்று நாடு குழப்பமான நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கும். அரசின் செயற்பாடுகளைப் பாராட்டாமல் இருப்பது கவலைக்குரிய விடயம்தான். ஆனால் தனிப்பட்ட ரீதியில் வெற்றி என ஏற்றுக் கொள்வார்கள்.  நாட்டுக்குத் தேவையான விதத்தில் பக்குவமான எதிர்க்கட்சியொன்று இல்லாமை பெருங்குறையாகும். இதனை கவலைக்குரிய விடயமாகவே நான் கருதுகிறேன்.

கேள்வி: இந்த தொற்று நிலைமைக்கு அரசாங்கம் முகம்கொடுத்த விதம், அதனை முகாமைத்துவம் செய்த திறன் பொதுமக்களிடம் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? அது எதிர்வரும் தேர்தலில் எவ்வாறு தாக்கத்தைச் செலுத்தும்?

பதில்: இந்நோய் உலகம் பூராவும் பரவும் வேளையில் அதனை அறிந்து கொள்வதும் சிகிச்சையளிப்பதுமே முக்கியமாகும். இங்கு செயற்பாடு குறித்து யாரும் அறிந்திருக்கவில்லை. உலக சுகாதார அமைப்பு வழங்கிய ஆலோசனைகளுக்கு அமையவே வேலை செய்ய வேண்டியிருந்தது. ஆனால் எமது நாட்டில் இது குறித்து ஆராய்ந்து சரியாக பிரச்சினையை புரிந்து கொண்டோம். அதனால் தொற்று சமூகத்தில் பரவுவது தடுக்கப்பட்டது. அவ்வாறு செய்யாவிட்டால் எமக்கு வெளியில் தலைகாட்டக் கூட முடியாதிருந்திருக்கும். அதே போல் நாட்டில் ஏற்பட்ட வருமான குறைவு மற்றும் மக்கள் முகம் கொடுத்த பிரச்சினைகளுக்கு உடனடியாக பதில் கிடைத்தது. உதாரணமாக கடன் தவணையை செலுத்த சலுகை வழங்கியமை, அபராத வட்டியை அறவிடாமை, 5000 ரூபா பெற்றுக் கொடுத்தமை என்பவற்றைக் கூறலாம். அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு தமது மக்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதும் மக்களைக் காப்பதுமாகும். அதற்காக பசில் ராஜபக்ஷ மற்றும் பிரதமரின் தலைமையின் கீழ் ஜனாதிபதி அனைத்தையும் முகாமைத்துவம் செய்தார்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் அநேகமாக அரசாங்கத்தையே ஏசுவார்கள். ஆனால் இச்சந்தர்ப்பத்தில் அரசு அதனை சரியாக முகாமைத்துவம் செய்ததால் மக்களிடையே ஜனாதிபதியிலிருந்து அடிமட்டத்திலுள்ள கிராம சேவகர்கள், சமுர்த்தி அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள், மக்கள் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் வரை தங்களது பணிகளை சரியான முறையில் ஆற்றியுள்ளார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. வெள்ளப் பிரச்சினை, வரட்சி ஏற்பட்டாலும் ஏச்சு வாங்கும் நிலைமையை நாம் கண்டுள்ளோம். நாடே ஏற்றுக் கொண்ட நாடே விரும்பிய திட்டங்கள் இவ்வேளையில் உருவாகின.

கேள்வி:  இச்சந்தர்ப்பத்தில் இராணுவ அதிகாரிகளை அரசின் நிர்வாக பதவிகளுக்கு நியமிப்பது அதிகமாகியுள்ளது. மக்கள் பிரதிநிதியாக இதனை எவ்வாறு நோக்குகிறீர்கள்?

பதில்: இராணுவ அதிகாரிகள் என்று பெரிய மாற்றங்கள் எதுவுமில்லை. அவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு விடயங்களில் அறிவுண்டு. யாராயிருந்தாலும் அப்பதவியின் பொறுப்பை நிறைவேற்றும் விதமே முக்கியமாகும். மற்றையது இராணுவ அதிகாரிகள் நிர்வாகப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவல்ல. அவர்கள் மாவட்ட அரசாங்க அதிபர்களாகவும் பணி புரிந்துள்ளார்கள். செயலாளர், உயர் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. மற்றையது சில சந்தர்ப்பங்களில் இலங்கையில் அரச சேவைகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன. அரச சேவையால் எதிர்பார்க்கப்பட்ட சில விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை. அதற்கும் இதற்கும் தொடர்புண்டா என நான் அறிய மாட்டேன். ஆனால் ஜனாதிபதி முகாமைத்துவம் செய்யக் கூடிய சரியான முடிவெடுக்கக் கூடியவர்கள் தன்னுடன் இருந்தால் தனக்கு உதவியாக இருக்குமென எண்ணியிருக்கலாம்.

கேள்வி: நாட்டிற்கு பெருமளவில் அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுத்த   வெளிநாட்டில் பணி புரிந்த தொழிலாளர்கள் தற்போது மீண்டும் நாட்டிற்கு திரும்பியுள்ளார்கள். எதிர்காலத்தில் நாட்டில் பெரும் வேலைவாய்ப்பின்மை ஏற்படும் சாத்தியமுள்ளது. இவற்றுக்கு அரசு வழங்கும் தீர்வு என்ன?

பதில்: இது சர்வதேச பிரச்சினையாகும். எவ்வளவு காலம் பாதிப்பை எற்படுத்தும் எனக் கூற முடியாது. முழு உலகத்தினதும் பொருளாதாரம் தலைகீழாக மாறிப் போயுள்ளது. உலகில் பாரிய பொருளாதார பாதிப்பு ஏற்படும். இந்நிலைமையில் எம் தொழிலாளர்களை பெரும் சக்தியாகக் கருதுகின்றேன். சிலர் திரும்பவும் செல்லலாம். ஆனால் எமது விவசாயம், கட்டட நிர்மாணம், போக்குவரத்து சேவை போன்ற துறைகளுக்கு பயிற்சி பெற்ற தொழிலாளர்களின் தேவை அதிகமாகவுள்ளது. அதே போல் இச்சந்தர்ப்பத்தில் பொருளாதார வளர்ச்சி வேகத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. அதற்காக அரச நிதியங்கள் போன்று, தனியார் பிரிவு நிதியங்களையும் பயன்படுத்தி வேகமான அபிவிருத்தியை மேற்கொள்ளலாம். 1918, 1919 களில் வீழ்ச்சியடைந்த ஜெர்மனி கைத்தொழில் புரட்சி மூலம் மீண்டெழுந்தது. அதே போல் எமக்கே உரிய முறைகள் என்ன? விவசாயமா, சேவைகளா என சிந்திக்க வேண்டும். அதற்கேற்ப முதலீடு செய்து, மனித வலுவைப் பாவித்து அவற்றை மேம்படுத்துவதால் நாட்டை மேம்படுத்த முடியும். பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிக்க அதிகரிக்க ஏனைய பிரிவுகளும் வளர்ச்சியடையும்.

உதாரணமாக எமது நாட்டில் எவ்வளவு தொழில்நுட்ப உபகரணங்களைத் தயாரிக்கலாம்,உற்பத்தி செய்யலாம்? இதுபற்றி நாம் ஒருபோதும் கதைப்பதில்லை. எமது பல்கலைக்கழக அமைப்பு மூலம் பெரும் வேலைகளை செய்யலாம். நாம் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று கூறிக் கொண்டிருக்காமல் முடிந்த இடத்தில் மீண்டும் ஆரம்பித்து முன்னோக்கி செல்ல வேண்டும். எமக்கு விவசாய பண்ணைகள் உள்ளன. எவ்வாறு அறுவடையை அதிகரிப்பது, தொழில்நுட்பத்தை பாவிப்பது, எவ்வாறு  ஏற்றுமதி செய்வது  என நிறைய விடயங்கள் உள்ளன. அவற்றை தெரிவு செய்து சரியான முறையில் மேம்படுத்தும் திட்டங்கள் பலவற்றை ஜனாதிபதி மேற்கொண்டு வருகிறார். உள்ளூர் பொருளாதாரத்தை ஏற்றுமதி பொருளாதாரம் வரை  கொண்டு செல்வதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

கேள்வி: பொருளாதார நெருக்கடியிலும் அரசால் மக்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகிறது. சஜித் பிரேமதாச அதனை இருபதாயிரம் வரை உயர்த்துமாறு கூறுகிறார். பின்னர் மறைமுகமாக ஐயாயிரத்தையும் வழங்க முடியாத நிலைமைக்கு முயற்சிகளை மேற்கொள்கிறார். அவர்களின் குற்றச்சாட்டானது இது அரசியல் இலாபம் கருதி செய்வது என்பதாகும். அது உண்மையா?

பதில்: சஜித் பிரேமதாச பகல் கனவு காண்கிறார். அவர் இந்நாட்டின் பொருளாதாரம் பற்றி அறியாதவர். இந்த ஐயாயிரம் ரூபாவை ஏன் கொடுக்கிறோம் என்பதைக் கூட அவர் சிந்திப்பதில்லை. இந்த ஐயாயிரம் ரூபாவில் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியுமென நான் எண்ணவில்லை. ஆனால் நான் நன்கறிவேன். எமது பிரதேசங்களில் அரசியல் பார்த்து அப்பணம் அளிக்கப்படவில்லை. கிராமங்களில் 1-0 - 15 வீடுகள்தான் எஞ்சியிருந்தன. வசதியில்லாதவர்கள் அனைவருக்கும் வழங்கினோம். அவர்கள் கூறுவது தவறு. அவ்வாறென்றால் அவர்கள் கிடைக்காதவர்களுக்கு பெற்றுக் கொடுக்கலாம். முதற் தடவையாக எதிர்க் கட்சியினரையும் பகிர்ந்தளிக்கும் வேலைக்கு இணைத்துக் கொண்டோம். இது நல்ல விடயம். ஐ.தே.க, ம.வி.மு. என அனைவரும் அக்குழுவில் அங்கம்  வகித்தார்கள். இவ்விடயத்தில் அரசியல் தலையீடு இருந்ததென கூறுவதன் கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

கிஹான் ஏக்கநாயக்க

தமிழில்: வீ. ஆர். வயலட்


Add new comment

Or log in with...