சொய்சாபுர உணவக துப்பாக்கிச்சூடு; மேலும் இருவர் கைது

சொய்சாபுர உணவக துப்பாக்கிச்சூடு; மேலும் இருவர் கைது-Soysapura Restaurant Shooting-2 More Suspect Arrested

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொய்சாபுர பிரதேசத்திலுள்ள உணவகமொன்றின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (02) பிற்பகல்,  கல்கிஸ்ஸை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, சந்தேகநபர் ஒருவரிடமிருந்து 1.1 கிராம் ஹெரோயினும், மற்றையவரிடமிருந்து 1.125 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள், 26, 36 வயதுகளுடைய, அங்குலானை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களை இன்றையதினம் (03) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த உணவக உரிமையாளரிடம் பாதாள குழுவொன்றைச் சேர்ந்த ஒருவர் வந்து, அரிசி கொள்வனவு செய்வதற்காக ரூபா 5 இலட்சம் தருமாறு கப்பம் கோரியுள்ளார். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை எனத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த குழுவினர் கார் ஒன்றில் வாள்களுடன் வந்து உணவகம் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு, பணியாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அதில் ஒருவரின் கையில் காயம் ஏற்பட்டிருந்தது.

அதன் பின்னர், மீண்டும் கடந்த மே 29ஆம் திகதி கார் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத குழுவினர், தன்னியக்க துப்பாக்கி மூலம் குறித்த உணவகம் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இச்சம்பவத்தில் குறித்த உணவத்தின் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்து அப்பகுதியில் கடமையிலிருந்த, பொலிஸார் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மே 30 ஆம் திகதி பாணந்துறை, எலுவில பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, அவரை மே 31ஆம் திகதி கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்தி 7 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய, நீதிமன்ற அனுமதி பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் கடந்த 2018ஆம் ஆண்டு மே 24ஆம் திகதி தெஹிவளை, கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினரான, கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பான வழக்கின் முக்கிய சந்தேகநபர் ஆவார் என்பதோடு, விளக்கமறியலில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.


Add new comment

Or log in with...