இந்தியாவிலிருந்து கடல் வழியாக வந்த தந்தை, மகள் தனிமைப்படுத்தலுக்கு

இந்தியாவிலிருந்து கடல் வழியாக வந்த தந்தை, மகள் தனிமைப்படுத்தலுக்கு-Father and Daughter Sent to Quarantine Center-Came Sri Lanka Illegally by Boat

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு வந்த தந்தை மற்றும் அவரது மகள் ஆகியோர் மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் இந்தியா அகதி  முகாமிலிருந்து கடல் மார்க்கமாக வருகை தந்த புலேந்திரன் (33) மற்றும் அவரது 8 வயது மகள் என தெரிய வந்துள்ளது.

இந்தியா தமிழ்நாடு கோயம்புத்தூர் அகதிகள் முகாமில் இருந்து   கடல் மூலம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (01)  அதிகாலை குறித்த இருவரும் தலைமன்னார் கடற்கரையை வந்தடைந்த இருவரும் அவரது தந்தையின் உதவியுடன் மடு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று (02) செவ்வாய்க்கிழமை மாலை மடு பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இவர்கள் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அம்புலான்ஸ் வண்டி மூலம் இராணுவத்தின் உதவியுடன் மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நிலையத்தில் 14 நாட்கள் குறித்த இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள் இல்லாத நிலையில் மீண்டும் மன்னாரிற்கு அனுப்பி வைக்கப்பட்டு மன்னாரில் உள்ள அவர்களின் வீட்டில் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர் என, வைத்திய அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.

(மன்னார் குறூப் நிருபர் - எஸ். றொசேரியன் லெம்பேட்)


Add new comment

Or log in with...