பங்களாதேஷில் முடக்கம் நீக்கம்: கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

பங்களாதேஷில் முடக்க நிலை தளர்த்தப்பட்டு சன நெரிசல் கொண்ட நகரங்களுக்கு மக்கள் பணிக்கு திரும்பிய கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நோய்த் தொற்று மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

“முடக்க நிலை நீக்கப்பட்டுள்ளது. நாம் வழக்கமான வாழ்வுக்கு திரும்புகிறோம்” என்று சுகாதார திணைக்கள பேச்சாளர் நசிமா சுல்தான் தெரிவித்துள்ளார்.

வேலைக்குத் திரும்புபவர்கள் முகக் கவசம் அணியும்படியும் சமூக இடைவெளியை பின்பற்றும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் கடந்த ஞாயிறன்று நாளாந்த நோய்த்தொற்று அதிகரிப்பாக 2,545 புதிய சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களாக முடக்க நிலையால் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் தலைநகர் டக்காவில் மக்கள் கூட்டம் அதிகரித்திருந்ததோடு ரயில் வண்டிகள் பெரும் கூட்டங்களை நிரப்பியபடி பயணித்தன.

கொரோனா வைரஸுக்கு எதிரான கட்டுப்பாடுகள் கடந்த மார்ச் 26 ஆம் திகதி கொண்டுவரப்பட்ட நிலையில் அவை தற்போது படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளன. தற்போது கல்வி நிறுவனங்கள் மாத்திரமே மூடப்பட்டுள்ளன.

168 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பங்களாதேஷில் 47,151 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதோடு 650 பேர் உயிரிழந்துள்ளனர்.

 


Add new comment

Or log in with...