அமெரிக்காவின் பல நகரங்களிலும் 6ஆவது நாளாக தொடர்ந்து பதற்றம்

பொலிஸ் பிடியில் இருந்த கறுப்பின ஆடவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு வெளியிட்டு அமெரிக்காவின் பல நகரங்களிலும் ஆறாவது இரவாகவும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகள் இடம்பெற்றன.

சுமார் 40 நகரங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு இருந்தபோதும் மக்கள் பெரும்பாலும் அதனைப் பொருட்படுத்துவதில்லை என்பதோடு பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.

நியூயோர்க், சிக்காகோ, பிலடெல்பியா மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் கலகமடக்கும் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. கூட்டங்களை கலைப்பதற்கு கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் மிளகாய் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.

பல நகரங்களிலும் பொலிஸ் வாகனங்கள் தீமூட்டப்பட்டு கடைகள் கொள்ளையிடப்பட்டன.

உள்நாட்டுப் பதற்றத்தை கட்டுப்படுத்த 15 மாநிலங்களில் 5,000 இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டுள்ளனர். வெள்ளை மாளிகைக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் எதிர்ப்புக் கூட்டம் கூடியதோடு கலகமடக்கும் பொலிஸார் மீது அவர்கள் தீப்பந்தங்கள் மற்றும் கற்களை வீசி எறிந்தனர்.

“மாநில மற்றும் உள்ளூர் சட்ட அமுலாக்கல் பிரிவினர் பாதுகாப்பிற்கு தொடர்ந்து பொறுப்பாக இருப்பர்” என்று அமெரிக்க தேசிய இராணுவம் அறிவித்துள்ளது.

வெள்ளை மாளிகைக்கு அருகில் இருக்கும் சொத்துகளுக்கு தீ மூட்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வொஷிங்டன் பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதில் வெள்ளை மாளிகைக்கு அருகில் இருக்கும் ஜனாதிபதி தேவாலயம் என்று அறியப்படும் புனித ஜோன்ஸ் எபிஸ்கோபல் தேவாலயம் அடங்கும்.

இதன்போது சிலர் வீதியில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகைகள், பிளாஸ்டிக் தடுப்புகளுக்கு தீவைத்து ஒரு பிரிவினர் வன்முறையில் ஈடுபட்டனர். சிலர் அப்பகுதியில் இருந்த அமெரிக்க தேசியக்கொடியைப் பிடுங்கி தீயில் எறிந்தனர். அந்தப் பகுதியே திடீரென போர்க்களம் போல் ஆகியது.

இதனால் போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் மோதல் வெடித்து இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அந்தப் பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

அந்தப் போராட்டத்தில் ஈடுட்ட 31 வயது நிரம்பிய முனா அப்தி நிருபர்களிடம் கூறுகையில், “நாங்கள் கறுப்பினத்தவர்களின் பிள்ளைகள், கறுப்பினத்தவர்களின் சகோதரர்கள். நாங்கள் எதற்காக உயிரிழக்க வேண்டும்.

இதுபோன்று நடப்பதால் நாங்கள் சோர்வடையமாட்டோம். அந்தச் சோர்வு இந்தத் தலைமுறைக்கு இல்லை. நாங்கள் அடக்குமுறைக்கு மட்டும் சோர்வடைகிறோம்” எனத் தெரிவித்தார்.

இதனால் வெள்ளை மாளிகைக்கு அருகே ஆயிரக்கணக்கில் பொலிஸார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களை வரவிடாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பதற்ற சூழல் காரணமாக ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் சிறிது நேரம் வெள்ளை மாளிகையில் இருக்கும் நிலவறையில் அடைக்கலம் பெற வேண்டி ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1968 இல் மார்டின் லுதர் கிங் படுகொலை செய்யப்பட்ட பின் ஏற்பட்ட வன்முறைகளுக்குப் பின்னர் மிகப்பெரியல் சமூகப் பதற்றம் மற்றும் இனக் கொந்தளிப்புக்கு முகம்கொடுத்திருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக சில நாட்களுக்கு முன்னர் வெறிச்சோடி இருந்த 75 க்கும் அதிகமான நகரங்களில் தற்போது ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜோர்ஜ் ப்ளோயிட் என்ற அந்த கறுப்பினத்தவரின் மரணம் வெள்ளையின பொலிஸாரினால் கறுப்பினத்தவர்கள் கொல்லப்படும் சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இடம்பெற்ற மினியாபொலிஸ் நகர் மாத்திரமன்றி நாடெங்கும் உள்ள சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் பாகுபாடு இந்த இந்த நிலைமை தீவிரமடைய காரணமாகியுள்ளது.

எனினும் கலவரத்தில் ஈடுபடுமாறு பொதுமக்களைத் தூண்டிவிடுவோரை, ‘உள்நாட்டுத் தீவிரவாதிகள்’ என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் சாடியுள்ளது.

ஆர்ப்பாட்டங்களின் போது கடைகள் சூறையாடப்படுதல், பொதுச் சொத்து அடித்து நொறுக்கப்படுதல், பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்படுதல் போன்றவற்றை ட்ரம்ப் நிர்வாகம் கண்டித்தது.

அமெரிக்காவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் பரவிவருவதால், பாதுகாப்பு அதிகாரிகள் நூற்றுக்கணக்கானோர் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...