அர்ஜுன் மகேந்திரனை அழைத்துவரும் ஆவணங்களில் 21,000 கையொப்பங்கள்

மூன்று தினங்கள் தொடர்ச்சியாக கையெழுத்திட்ட முன்னாள் ஜனாதிபதி

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து நாட்டுக்கு அழைப்பது தொடர்பாக சட்ட மாஅதிபரால் தயாரிக்கப்பட்ட ஆவணங்களில் அரச தலைவர் என்ற வகையில் தொடர்ந்து மூன்று தினங்களாக தாம் 21,000 கையொப்பங்களை இட நேரிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரினால் மத்திய வங்கி ஆளுநராக சிங்கப்பூர் வாசியான அர்ஜுன் மகேந்திரன் நியமிக்கப்பட்ட போது அதற்கு கடுமையான எதிர்ப்பை தாம் வெளியிட்டதாகவும் எனினும் அரசாங்கத்தை ஸ்தாபித்து இரண்டு வார காலமே ஆன நிலையில் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கிடையில் சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்ற காரணத்தினாலேயே பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க கடும் அதிருப்தியுடன் அர்ஜுன் மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க நேரிட்டது என்றும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் நான் நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழு வெற்றிகரமாக அந்த செயற்பாடுகளை முன்னெடுத்தது.

நானறிந்த வகையில் நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டின் ஒவ்வொரு அரசாங்கங்களும் நியமித்த ஜனாதிபதி ஆணைக் குழுக்களில் மத்திய வங்கி பிணைமுறி மோசடி விசாரணைகளுக்காக நான் நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழு போன்று நாட்டு மக்களினதும் கல்விமான்களினதும்  ஊடகவியலாளர்களினதும் வரவேற்பைப் பெற்ற ஆணைக்குழு இருக்கவில்லை.

அதனால்  ஜே.ஆர்.முதல் இன்று வரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர்கள் இது வரை நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுக்களை விட உயர் கௌரவம் அதற்கு கிடைத்தது.

எவ்வாறெனினும் பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எனக்கு கிடைத்தது.

அதன் பின்னர் அந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்றும் அந்த அறிக்கை இணையத்திலுள்ளது.

அதன்பிறகு அந்த அறிக்கையை நான் சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு சமர்ப்பித்தேன். அத்துடன் அதனை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கும் குற்றத்தடுப்பு விசாரணைக்குழுவிற்கும் கையளித்துள்ளேன்.

மேற்படி ஆணைக்குழு சிறப்பாக அதன் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது. அந்த அறிக்கையில் மேற்படி மோசடி தொடர்பில் கணக்காய்வு மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டது.

அந்த பரிந்துரைக்கிணங்க செயற்பட்டதுடன் அந்த அனைத்து ஆணைக்குழு அறிக்கைகளும் 2017 டிசம்பர் 30ஆம் திகதியன்று ஆணைக்குழு என்னிடம் கையளித்தது என்றும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...