அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம் | தினகரன்


அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்

இ.தொ.க. வின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல், பூரண அரச மரியாதையுடன் இன்று (31) பிற்பகல் 5.15 மணியளவில் நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில்  அக்கினியில் சங்கமமாகியது.

கடந்த 26 ஆம் திகதி  மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அன்னாரது பத்தரமுல்ல இல்லத்தில் வைக்கப்பட்டு, பின்னர் கொழும்பு ஜயரட்ன மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,  பாராளுமன்றத்துக்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் இ.தொ.க வின் தலைமைக் காரியாலயம் சௌமியபவனில் வைக்கப்பட்டு, அதனையடுத்து அவரது சொந்த ஊரான வெவண்டனுக்கு கொண்டு வரப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் நுவரெலியா, தலவாக்கலை ஊடாக கொட்டகலைக்கு கொண்டு வரப்பட்டு இ.தொ.க. காரியாலயமான CLF இல்வைக்கப்பட்டது.

படையினரின் பலத்த பாதுகாப்போடு  இன்று பிற்பகல் கொட்டகலையிலிருந்து ஹட்டன் டிக்கோயா வழியாக நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டு அரங்கிற்கு கொண்டு வரப்பட்ட அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பெருந்திரளான பொதுமக்கள் வீதியின் இரு மருங்கிலும்  சுகாதார இடைவெளியை பேணி நின்று மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அஞ்சலி உரை நிகழ்த்திய பின்னர், பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். பிரமுகர்களின் இரங்கல் உரையை அடுத்து அன்னாரின் பூதவுடல் அரச மரியாதையுடன் அக்கினியுடன் சங்கமமாகியது.

இறுதி அஞ்சலி நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி , உரை நிகழ்த்தினர்.

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் – கிருஸ்ணா, தலவாக்கலை குறூப் நிருபர், நுவரெலியா தினகரன் நிருபர்)
 


Add new comment

Or log in with...