சுகாதார விதிமுறை பேணி ஆறுமுகன் தொண்டமானின் நல்லடக்கம்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை இன்று (29)  பிற்பகல் 2.00  மணியளவில் நோர்வூட் மைதானத்தை நோக்கி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரச மரியாதையுடன் எடுத்துச் செல்லப்படவுள்ளது.

ரம்பொடை, வேவண்டன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடல் நேற்று (30)  கொட்டகலை சி.எல்.எப் வளாகத்துக்கு எடுத்து வரப்பட்டது.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையிலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொலிஸாரின் அனுமதியை பெற்றவர்கள் மாத்திரமே, உடலின் உஷ்ணத்தை அளவிட்ட பின்னர் அஞ்சலிக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இன்றையதினமும் காலை முதல் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சி.எல்.எப் வளாகத்தில் இருந்து நோர்வூட் மைதானம் நோக்கி பிற்பகல் 2 மணியளவில் சடலம் எடுத்து செல்லப்படும்.

சுகாதார ஆலோசனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு அமைய, அவரது இறுதிக்கிரியைகளை மேற்கொள்ள, குறைந்த எண்ணிக்கையிலானோரை கலந்துகொள்வதற்கு அனுமதிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அங்கு பூரண அரச மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் முடிவடைந்த பின்னர் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும். இறுதிக்கிரியைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நோர்வூட்டில் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட அளவானோர்களே மைதான வளாகத்துக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, இராணுவம், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 26ஆம் திகதி திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தனது 55ஆவது வயதில் காலமானார்.

(ஹட்டன் சுழற்சி நிருபர் – ஜி.கே. கிருஷாந்தன்) 
 


Add new comment

Or log in with...