தமிழீழ சைபர் போஸ் மீண்டும் ஊடுருவல் | தினகரன்


தமிழீழ சைபர் போஸ் மீண்டும் ஊடுருவல்

தமிழீழ சைபர் போஸ் மீண்டும் ஊடுருவல்-Tamil Eelam Cyber Force Attack 2 Government Websites

அரசாங்கத்தின் இரண்டு இணையத்தளங்கள் மீது ‘தமிழீழ சைபர் படை’ எனும் குழு மீண்டும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு www.pubad.gov.lk மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் www.slbfe.lk ஆகியவற்றின் இணையத்தளங்கள் மீது இன்று (30)  அதிகாலை சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை விமானப்படையின் சைபர் பாதுகாப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையை மையமாக கொண்டு இயங்கும்  05 இணையத்தளங்கள் மீது கடந்த மே 18 ஆம் திகதி இக்குழுவினால் சைபர் தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

யுத்த வெற்றி நினைவுதினமான மே 18ஆம் திகதியன்று, ஹிரு நியூஸ், சீனாவுக்கான இலங்கை தூதரகம் உள்ளிட்ட .lk மற்றும் .com டொமைன்களைக் கொண்ட 5 இணையத்தளங்கள் மீது  இவ்வாறு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு ஊடுருவப்பட்டிருந்ததாக, இலங்கை கணனி அவசர தயார்நிலை குழு (SLCERT) தெரிவித்திருந்தது. பின்னர் அவை வழமைக்கு கொண்டுவரப்பட்டன.

கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக  தோற்கடிக்கப்பட்ட தினத்தில், இவ்வாறு ஒவ்வொரு மே மாதம் 18ஆம் திகதியும் சைபர் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, SLCERT தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்திருந்தார்.


Add new comment

Or log in with...