இந்திய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியுடன் சந்திப்பு | தினகரன்

இந்திய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இந்திய உயர் ஸ்தானிகர்  கோபால் பாக்லே மரியாதையின் நிமித்தம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்தித்தார்.

இலங்கை மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இந்திய தலைமைத்துவத்தின் வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததுடன் காணொளி மாநாட்டின் மூலமாக தனது நியமன சான்றிதழ்களை ஏற்றுக்கொண்டதற்தாக ஜனாதிபதிக்கு உயர்ஸ்தானிகர் தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

2019 நவம்பரில் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தமையை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். மேலும் கொவிட்19 நோயை எதிர்கொள்ளும் செயற்பாடுகளில் இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா தொடர்ச்சியாக வழங்கிவரும் உதவிகளுக்காக அவர் நன்றிகளை தெரிவித்தார்.அத்துடன் இந்தியா-இலங்கைக்கிடையிலான சகல துறைகளிலுமான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுவாக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையில் அண்மைய காலப்பகுதியில் இடம்பெற்றுவரும் உயர்மட்ட தொடர்புகள் மூலமாக பாரம்பரிய ரீதியில் நெருக்கமானதும் அதிசிறந்ததுமான உறவுமுறையில் ஓர்உத்வேகம் ஏற்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகர் இங்கு சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயம் தொடர்பாக குறிப்பிட்டிருந்த உயர் ஸ்தானிகர், இரு நாட்டு மக்களினதும் சமாதானம் செழுமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக இலங்கையுடனான ஒத்துழைப்பை மேலும் வலுவாக்கும் செயற்பாடுகளில் இலங்கையின் மிகநெருங்கிய அயல்நாடு என்ற ரீதியில் இந்தியா உயர்மட்ட ஈடுபாட்டை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் 2020 மே 23 ஆம் திகதியன்று நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் அடிப்படையில், பரஸ்பர முன்னுரிமை கொண்ட விடயங்களாக அடையாளம் காணப்பட்டவற்றில் அக்கறையியை செலுத்தி, இலங்கையில் கோவிட்டுக்குப் பின்னரான பொருளாதார மீட்சியில் இந்தியாவின் பங்களிப்பை, குறிப்பாக இலங்கையில் அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டங்கள், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் இலங்கையின் தேவைப்பாடுகளுடன் தொடர்புடைய புதிய விடயங்களை, துரிதப்படுத்துவதற்கும் ஜனாதிபதியும் இந்தி உயர் ஸ்தானிகரும் இணங்கியிருந்தனர்.

இலங்கையின் பொருளாதாரத்தில் இந்திய முதலீடுகள் மூலமான பங்களிப்பை சுட்டிக்காட்டிய உயர் ஸ்தானிகர், இலங்கை அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்ட துறைகளில் முன்னுரிமையின் அடிப்படையில் இந்திய நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பயங்கரவாதம் போன்ற பொதுவான அச்சுறுத்தல்களை முறியடிக்க கூட்டாக முயற்சிகளை முன்னெடுத்தல், அனுபவ மற்றும் தகவல் பகிர்வு ஆகியவை உள்ளடங்கலாக பாதுகாப்புத்துறைசார் ஒத்துழைப்புக்களை மேலும் வலுவாக்கும் வழிமுறைகள் போன்றவை தொடர்பாகவும் ஜனாதிபதியும் உயர்ஸ்தானிகரும் கலந்துரையாடினர்.

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் பகிரப்பட்ட பௌத்த மரபு, நாகரீக தொடர்புகள் போன்றவை இரு நாட்டு மக்களுக்குமிடையிலான பிணைப்பை மேலும் வலுவாக்கும் அடித்தளத்தை உருவாக்குவதாகவும் ஜனாதிபதியும் உயர்ஸ்தானிகரும் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் சிக்கியிருந்த இந்தியபிரஜைகள் நாடு திரும்பும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்புக்கும் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் நன்றி தெரிவித்தார்.


Add new comment

Or log in with...