கொரோனா பெருந்தொற்று நோயும் ஆயுர்வேத பாதுகாப்பு முறைகளும் | தினகரன்

கொரோனா பெருந்தொற்று நோயும் ஆயுர்வேத பாதுகாப்பு முறைகளும்

நமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. என்றாலும் மக்களிடையே கொரோனா வைரஸைப் பற்றிய பல கேள்விகளும் குழப்பங்களும் தொடர்ந்தும் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் இந்த தொற்று நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காகவும் இனிவரும் காலங்களில் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான ஆயுர்வேத சிகிச்சை முறைகள் பற்றியும் நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி (தொற்றா நோய்) வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் தினகரனுக்கு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

அவருடனான நேர்காணலின் போது அவர் வழங்கிய தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

உலகெங்கிலும் உள்ள வல்லரசு நாடுகள் முதல் அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிலும் இன்று அச்சுறுத்தலாகக் காணப்படுவது கொரோனா வைரஸ் தொற்று நோய் ஆகும்.

இந்த தொற்று நோய்த் தாக்கம் மக்களின் உடலில் மாத்திரமன்றி உள்ளத்திலும் மிகப் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது பல நாடுகள் முடங்கியுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒருபுறம்... இந்நோய் தங்களுக்கும் தொற்றி விடும் என்ற பீதியில் வாழும் மக்கள் இன்னொருபுறம்...

இவை இரண்டுமே மிகப் பெரிய உளநலப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றன. சில சமூக வலைத்தளங்களில் பகிரப்படும்   குறிப்பிட்ட தகவல்கள் மக்கள் மத்தியில் இந்த உளப்பாதிப்பினை மேலும் அதிகரித்து பயத்தை ஏற்படுத்தியுள்ளன.

உலகில் கடந்த மூன்று மாத காலத்தில் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பல இலட்சங்களையும் தாண்டியுள்ளது. இந்தத் தொற்றுக்கு இதுவரை ஆயிரக்கணக்கானோர் பலியாகியிருப்பதும் மக்களிடையே இந்த நோய் குறித்து மிகுந்த பயத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனெனில் தற்போது வரை கொரோனா வைரஸை அழிப்பதற்கு எந்த நாடுகளாலும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் சில மருந்துகள் கொரோனா வைரஸை குணமாக்கி விடும் என்று கண்டறியப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருவதும் விசேட அம்சமாகும்.

இவ்வைரஸ் தொற்றியுள்ள ஒருவரின் மூலம் இன்னொருவருக்கு மிக விரைவாக தொற்றுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. ஆகையால் இதுவரை காலமும் வைத்திய அதிகாரிகளினால் முன்மொழியப்பட்ட நோய்த் தடுப்பு முறைகளை கையாள்வதுடன் மக்கள் இளஞ்சூடான உப்புநீரில் உட்தொண்டையைக் கழுவுதலுடன்(கொப்பளித்தல்) அதிகமாக உடலை வருத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும் வேண்டும்.

இளஞ்சூடான உப்புநீரில் தொண்டையைக் கழுவ வேண்டும். சர்வாதி தைலம், கோலஸ்லஸ்மா தைலம் இரு துளி காலையும் மாலையும் மூக்கில் இட்டு உறிஞ்சவும்.
ருக்கில், தேவதாரு, அகில், பெருங்காயம், துளசி, வசம்பு, பேய்ப்டோல், வேப்பம் இலை, வேப்பெண்ணெய் போன்ற கிருமி எதிர்ப்பு மூலிகைகளினால் வீடு மற்றும் பொது இடங்களைச் சுற்றி புகை போடுதல் வேண்டும்.

  வசம்பு, பெருங்காயம் சேர்த்து செய்த உருண்டை கைப்யுயத்தின் நடுவில் (தோளிற்கும் முழங்கைக்கும் நடுவில்) தொடுமாறு கட்டவும் கொதித்தாறிய இளம் சூடான நீரை போதியளவு குடிக்கவும். சுடுநீருடன் தண்ணீர் கலந்து குடிப்பதை தவிர்க்கவும்.

உணவு உண்ணாமல் இருப்பதைத் தவிர்க்கவும். உடல் சக்தியை அதிகரிப்பதற்காக உரிய நேரத்தில் உணவை உண்ணவும். புதிய மரக்கறி, பழங்கள் சேர்த்து உண்ணவும்.

செயற்கை மற்றும் துரித உணவுகளைத் தவிர்க்கவும். உணவு சமைக்கும் போது இயற்கையான மசாலாத் தூள்களைப் பாவிக்கவும். தேசிய உணவு வகைகளை மட்டும் பாவனைக்கு எடுக்கவும்.

இறக்குதி செய்யப்பட்ட உண்வுகளைத் தவிர்க்கவும். மரக்கறி, பழவகைகள், இறைச்சி உட்பட தயாரிக்கப்பட்ட உணவுகள், புதிய தேசிய பழவகைகளை சாப்பிடவும் (மாதுழம் பழம், நெல்லிக்காய், வெரளிக்காய், சீத்தாப் பழம், வாழைப்பழம்)

தினந்தோறும் காலையில் இலைக் கஞ்சி, தானியக் கஞ்சி குடிக்கவும். பகிதாரங் வட்டுக் கத்தரி, காட்டு வட்டுக் கத்தரி, வல்லாரை, சீதேவியார் செங்கழுநீர், தேங்காய்ப்பூ கீரை, கறிவேப்பிலை உணவில் பயன்படுத்தவும். இறைச்சி அல்லது முட்டை சாப்பிடும் போது நன்றாக சமைத்து அல்லது அவித்து சாப்பிடவும்.

ஓய்வெடுத்தல், சுத்தமான கொதித்தாறிய நீரைப் பருகுதல் சிறந்தது. பானங்களைப் பருகவும். தேனுடன் உப்புக் கஞ்சி, அரிசிக் கஞ்சி, கஞ்சிநீர், பாரமற்ற உணவு மற்றும் பானங்கள் சிறந்தவை. இவை உடலுக்கு சக்தியை வழங்கி நிர்ப்பீடனத்தை அதிகரிக்கச் செய்யும்.

தொண்டை வருத்தத்தைத் தவிர்ப்பதற்கு ஆவி பிடித்தல் வேண்டும். பாதணிகள் மற்றும் தலைக்கவசம் என்பவற்றை பாவிக்கவும். அதிக எண்ணெயுடணான உணவு வகைககள், ஜீரணமாவதற்கு கடினமான உணவு வகைகள், பாரமான உணவு வகைகள் நல்லதல்ல.

அடுத்தடுத்து உணவு வவைகளை உண்ணல், அதிகம் சூடான உணவு வகைகளை எடுத்தல், இரவில் உறங்காமல் இருத்தல், குரோதம், கோபம், பயம், ஆவேசம் தவிர்க்கப்பட வேண்டும்.

எமது உடலினுள் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதற்கான சில வழி முறைகள் வருமாறு;

மிளகு – 100 கிராம், ஏலக்காய் - 10, 100 கிராம் கொத்தமல்லி, இஞ்சி 100 கிராம், துளசி இலை அல்லது கற்பூரவல்லி இலை 100 கிராம் ஆகியவற்றை எடுத்து சுத்தம் செய்த பின்னர் 5 லீற்றர் தண்ணீரில் இட்டு அதனை 2.5 லீற்றர் அளவு குறையும் வரை  கொதிக்க வைத்துப் பருகுதல் வேண்டும்.

பவள மல்லிகை – 5 இலை, மிளகு – 6, நீர்  200 மில்லி லீற்றர் மற்றும் தேசிக்காயும் தேனும் சேர்த்து 50 மில்லி கிராம் எடுத்து தாளிசாதம் தயார் செய்து பருகுதல் மிகச் சிறப்பாகும்.

பின்வரும் பொருட்களைப் பயன்படுத்தி குடிநீர் தயார் செய்து தினமும் பருகுதல் முக்கியமாகும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை எமது உடலினுள் கூட்டும். இஞ்சி 50 கிராம், கொத்தமல்லி 200 கிராம்,மரமஞ்சள் 50 கிராம், சித்தரத்தை 50 கிராம், வேம்பு இலை, வேம்பு பட்டை, வேம்பு விதை ,கறுவாப்பட்டை, மஞ்சள் ஆகிய பொருட்களைப் பயன்படுத்தி புகையினைத் தயார் செய்து வீட்டினுள்ளும் சுற்றுப்புறச் சூழலிலும் புகையிடல் வேண்டத்தக்கது.

பெருங்காயம் 0.5 கிராம், வசம்பு 01 கிராம் ஆகிய பொருட்களைக் கொண்டு பாதுகாப்புப் பட்டி ஒன்றினைத் தயார் செய்து அதனை உடலில் அல்லது வீட்டில் தொங்க விடுவதன் மூலம் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற வாய்ப்புள்ளது.

இவ்வாறு டொக்டர் நக்பர் விபரித்தார்.

நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி (தொற்றா நோய்) வைத்தியசாலையின் ஏற்பாட்டில் வைத்தியர் கே.எல்.எம்.நக்பரினால் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறும் பொருட்டு அம்பாறை மாவட்டத்தில் மூவீன அதிகாரிகள், முப்படையினர், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிப்பதற்காக பாதுகாப்பு மருந்துப் பொதிகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

எம்.ஐ.எம்.றியாஸ்
(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்) 


Add new comment

Or log in with...