கொழும்பு கபூர் கட்டடத்திலுள்ள கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டனர்

கொழும்பு கபூர் கட்டடத்திலுள்ள கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டனர்-Navy Personal Identified-Gaffoor Building Isolated-Isuru Suriyabandara
கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார | கொழும்பு கபூர் கட்டடம்

- கடற்படை உறுப்பினருக்கு கொரோனா தொற்று
- அவருடன் தொடர்புபட்ட அனைவரும் தனிமைப்படுத்தலில்

- மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை

கொழும்பு  கோட்டை, சேர் பரோன் ஜயதிலக்க மாவத்தையில் உள்ள கபூர் கட்டடத்தில் தங்கியிருந்த கடற்படையைச் சேர்ந்த நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை, அடையாளப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த கட்டடத்தில் தங்கியிருந்த அவருடன் தொடர்புடைய கடற்படையைச் சேர்ந்த அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்தார்.

அவர்கள் குறித்த கட்டத்திலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்றையதினம் (27) மேற்கொள்ளப்பட்ட சோதனைகளை அடுத்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

குறித்த கட்டடம் ஆனது புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக தற்காலிகமாக கடற்படை வசம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நிலையை அடுத்து, கடற்படையில் அத்தியாவசிய நிர்வாக நடவடிக்கைக்காக அக்கட்டத்தைப் பயன்படுத்தி  வந்ததாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக இக்கட்டடமானது, வெலிசறை கடற்படை முகாம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, வெலிசறை முகாமிற்கு அத்தியாவசிய சேவையை வழங்கும் பொருட்டு இக்கட்டடத்தை பயன்படுத்தி வந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். குறிப்பாக அவர்களுக்கு அவசியமான உணவு, வெலிசறை வைத்தியசாலை நடவடிக்கைக்கான போக்குவரத்தை வழங்கும் சாரதிகள் போன்றவர்களே அக்கட்டடத்தில் தங்கி வந்ததாக தெரிவித்த அவர், இவ்வாறான சேவையில் ஈடுபடுகின்றவர்கள், வேறு முகாம்களில் உள்ளவர்களுடனோ, சமூகத்திலுள்ளவர்களுடனோ தொடர்புறாதிருக்கும் வகையிலேயே அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான பணிகளில் ஈடுபடுகின்றவர்களை பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையிலேயே நேற்றையதினம் (27) ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர், இசுறு சூரிய பண்டார தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அவருடன் தொடர்புபட்ட முதன்நிலை தொடர்பாளர்களை மாத்திரம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள இக்கட்டடத்தின் அமைவிடம் தொடர்பிலோ அதிலுள்ளவர்கள் தொடர்பிலோ பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்த இசுறு சூரிய பண்டார, அவர்கள் சமூகத்திலுள்ளவர்களுடன் எவ்வகையான தொடர்புகளையும் கொண்டிராதவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது கொரோனா தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 1,524 பேரில் கடற்படை மற்றும் அவர்களுடன் நெருக்கமான 758 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 712 கடற்படையினர் உள்ளடங்குகின்றனர்.

இது தற்போது இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கையில் சுமார் அரைவாசியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...