அம்பாறை மாவட்ட தமிழ்மொழிக் கலைஞர்களுக்கு ரூ. 10 ஆயிரம் கொடுப்பனவு | தினகரன்


அம்பாறை மாவட்ட தமிழ்மொழிக் கலைஞர்களுக்கு ரூ. 10 ஆயிரம் கொடுப்பனவு

பிரதேச செயலக ரீதியாக வழங்கி வைப்பு 

கலாசார அலுவல்கள் திணைக்களம் வருடாந்தம் நடைமுறைப்படுத்தி வரும் கலைஞர் நலனோம்பு வேலைத்திட்டத்தின் கீழ், உதவி தேவையாகவுள்ள கலைஞர்களுக்கு பணக் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், இவ்வருடமும் அம்பாறை மாவட்ட கலைஞர்கள் நன்மையடைந்து வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் 13 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள தமிழ்மொழிக் கலைஞர்கள் 74 பேருக்கு ரூபா 10 ஆயிரம் உதவிக் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அம்பாறை மாவட்ட  கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.றின்ஸான் தெரிவித்தார். 

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இப்பணி பிரதேச, செயலக ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அம்பாறை மாவட்டச் செயலாளர் டீ.எம்.எல்.பண்டாரநாயக்காவின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பேரில், அம்பாறை மேலதிக மாவட்டச் செயலாளர்கள் ஏ.எம்.அப்துல் லத்தீப், வீ.ஜெகதீஸன் ஆகியோர் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு நேரடியாகச் சென்று சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள், பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சகிதம் கலைஞர்களுக்கு உதவிக் கொடுப்பனவை கையளித்து வருகின்றனர். 

அம்பாறை மாவட்டத்திலுள்ள 13 தமிழ்மொழி பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து, ஏற்கனவே கோரப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் 60 முதல் 70 வயதுக்குட்பட்ட கலைஞர்கள் 74 பேர் இவ்வருடம் கொடுப்பனவுக்குத் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் றின்ஸான் மேலும் தெரிவித்தார்.   

அட்டாளைச்சேனை மத்திய நிருபர்  


Add new comment

Or log in with...