மலையகத்தில் வெள்ளைக்கொடிகள் பறக்கவிட்டு பெருந்துயரத்தை வெளிப்படுத்தும் மக்கள் | தினகரன்


மலையகத்தில் வெள்ளைக்கொடிகள் பறக்கவிட்டு பெருந்துயரத்தை வெளிப்படுத்தும் மக்கள்

இலங்கைத் தொழிலாளர் காஸ்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவால் மலையக மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அரசியல் பேதங்களுக்கு அப்பால் மலையகச் சமூகத்திற்கு தலைமைக்கொடுத்த ஆளுமைமிக்க ஒரு தலைவராக ஆறுமுகன் தொண்டமானை மலையக மக்கள் பார்க்கின்றனர்.

மலையக நகரங்களிலும், தோட்டப்பகுதிகளிலும் வீடுகளுக்கு முன்னாலும், பொது இடங்களிலும் வெள்ளைக்கொடிகள் பறக்கவிட்டு தமது சோகத்தை கட்சி, தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் அனைவரும் வெளிப்படுத்தி வருகின்றனர். அத்துடன், மலையகத் தமிழர்கள் வாழும் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளைக் கொடிகள் பறக்கவிட்டு தமது சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சோகமயத்துக்கு உள்ளானதால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் நேற்றைய தினம் தொழிலுக்கும் செல்லவில்லை.

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொழும்பில் இன்றைய தினம் அஞ்சலிக்காக பாராளுமன்றத்தில் வைக்கப்படும். நாளை காலை கண்டி பாதையின் ஊடாக புசல்லாவைக்கு எடுத்துவரப்பட்டு வெவன்டன் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு சனிக்கிழமை கொட்டகலைக்கு எடுத்துச் செல்லப்படும். இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நோர்வூட் பொது மைதானத்தில் இறுதி கிரியைகள் நடத்தப்படவுள்ளது.

நுவரெலியா, பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்தறை என மலையகத் தமிழர்கள் வாழும் அனைத்துப் பிரதேசங்களிலும் நேற்றைய தினம் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டன. 

ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை, நானுஓயா, பூண்டுலோயா, நோர்வூட், டயகம, அக்கரப்பத்தனை, பொகவந்தலாவை என அனைத்து மலையக பிரதேசங்களிலும் வெள்ளிக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன், அஞ்சலிக்காக புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் பசறை, மடூல்சீமை, லுணுகலை, ஹாலிஎல, கந்தேகெதர பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லாது வீட்டில் இருந்தபடியே மறைந்த தலைவருக்கு தமது அஞ்சலியை செலுத்தினர்.

பதுளையில் தோட்டங்கள் தோறும் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டிருப்பதுடன் வெள்ளை நிற இறப்பர் சீட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு வருகின்றன.

இப்பணியில் கட்சி பேதமின்றி இளைஞர்கள் ஈடுபட்டு வருவதை காணமுடிகின்றது.

பசறை, மடூல்சீமை, லுணுகலை, ஹாலிஎல, கந்தேகெதர மற்றும் மீதும்பிட்டிய போன்ற நகரங்களில் வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டு மறைந்த தலைவரின் படத்துடன் அஞ்சலி அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.                               

முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவு குறித்து கருத்து தெரிவித்த பசறை வெரலபத்தன தமிழ் வித்தியாலய அதிபர் ஆ. ரமேஷ்;,

ஆளுமை மிக்க மக்கள் தலைவனை இழந்து விட்டோம். தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல மலையக கல்வி துறைக்கும் அவர் அளப்பரிய சேவையாற்றியுள்ளார். அந்த இடைவெளி நிரப்பப்பட வேண்டும் என்றார்.                                                 

இ.தொ.காவின் நீண்டகால தோட்டக் கமிட்டி தலைவரான ஆசைத்தம்பி கருத்து வெளியிடுகையில், அவருடைய ஒரு வார்த்தைக்கு மலையகம் கட்டுப்படும். வேலை நிறுத்தம், ஏனைய போராட்டங்கள் அனைத்திலும் அவர் எங்களுடன் இருக்கிறார் என்ற தைரியத்தில் இறங்கினோம். மறைவை ஜீரணிக்க முடியவில்லை என்றார்.


Add new comment

Or log in with...