ஹொங்கொங் மக்கள் அமைதிகாக்க நகரத் தலைவர் கேர்ரி லாம் கோரிக்கை

சீனா முன்மொழிந்துள்ள புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஹொங்கொங் மக்களின் உரிமைகள், சுதந்திரம் ஆகியவற்றை நசுக்கும் ஒன்றல்ல என்று ஹொங்கொங் தலைமை நிர்வாகி கேர்ரி லாம் உறுதியளித்துள்ளார்.

பரிந்துரைக்கப்பட்ட புதிய சட்டத்தின் தகவல்கள் வெளியாகும்வரை அமைதி காக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

புதிய சட்டம் தொடர்பான அண்மைய விபரங்களைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் முயற்சிகளைத் தமது அரசாங்கம் மேற்கொள்ளும் என்றார் லாம். புதிய சட்டம் பற்றிச் சீனா சென்ற வாரம் அறிவித்திருந்தது. பிரிவினைவாதம், அரசாங்கத்தைக் கீழறுக்கும் நடவடிக்கைகள், பயங்கரவாதம் ஆகியவை தேசியப் பாதுகாப்புக்கு மிரட்டல்கள் என்று புதிய சட்டம் வரையறுக்கிறது.

அதனைக் காரணங்காட்டி சீனப் புலனாய்வு அமைப்புகள் ஹொங்கொங்கில் தளம் அமைக்க முற்படும் என்று கவனிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சீன பாராளுமன்றத்தின் வருடாந்திரக் கூட்டத் தொடர் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் புதிய சட்டம்பற்றி விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த சட்டத்திற்கு எதிராக ஹொங்கொங்கில் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...