கொரோனா அச்சம் நீங்கும் வரை முகக்கவசமே மக்களுக்குத் துணை

Mask அணிந்து கொள்வதில் சரியான கவனம் செலுத்துவது அவசியம்

பெருந்தொற்றாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகும் என்று நிபுணர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். எனவே உலகின் பல நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் மக்களைக் கொண்டு செல்ல வழி நடத்தி வருகின்றன.

பல நாடுகளிலும் அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கில்  தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தளர்வுகள் கொடுக்கப்பட்டதால் நாம் கொரோனாவை வென்று விட்டோம் என்பது அர்த்தமில்லை. வைரஸ் தாக்கும் அபாயம் இப்போதும் அதிகம் உள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக விலகலை நாம் மேலும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்க சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதுதான் அறிவுரையாக இருக்கின்றது.

மேலும் முகக்கவசம் அணியும் போது சில குறிப்பிட்ட விஷயங்களில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.   அழுக்கு நிறைந்த கைகளால் முகக்கவசத்தை தொடக் கூடாது.

இப்படி அழுக்குக் கைகளால் முகக்கவசத்தைத் தொடுவதால் முகக்கவசம் அணிவதற்கான பலன் முற்றிலும் அழிக்கப்படுகிறது.  கிருமிகளிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே நீங்கள் முகக்கவசம் அணிகிறீர்கள்.

ஆனால் நீங்கள் அழுக்குக் கைகளால் முகக்கவசத்தைத் தொடுவதால் உங்களை நீங்களே அபாயத்திற்கு உட்படுத்திக் கொள்கிறீர்கள். எனவே முகத்தில் உள்ள முகக்கவசத்தைத் தொடுவதற்கு முன்னர் கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும்.

முகம் மற்றும் கைகளை சவர்க்காரம் பயன்படுத்திக் கழுவிய பின்னர் முகக்கவசம் அணிவது இன்னும் சிறந்தது. ஒருவேளை முகக்கவசத்தை சரி செய்யும் நிலை ஏற்பட்டால்  கைகளை சனிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்த பின்னர் சரி செய்யவும். 

ஒரு நாள் முழுவதும் ஒரே முகக்கவசம் அணிவதைத் தவிர்க்கவும். ஒரு நாள் முழுவதும் வெளியில் வேலை செய்பவர்களுக்கு இந்தக் குறிப்பு பொருந்தும். வெளியில் வேலைக்குச் செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

ஆகவே உங்கள் கையில் எப்போதும் கூடுதல் எண்ணிக்கையில் முகக்கவசம் வைத்திருக்க வேண்டும்.

பொதுவாக இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஒரு முகக்கவசம் அணிவதைத் தவிர்க்க வேண்டும். இரண்டு மணிநேரத்திற்குப் பின்னர் நீங்கள் வேறு ஒரு முகக்கவசம் பயன்படுத்தலாம் அல்லது அணிந்திருக்கும் முகக்கவசத்தை கிருமி நீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம். காரணம் இந்த நேரத்திற்குள் கிருமிகள் அந்த முகக்கவசத்தில் படிந்திருக்கலாம். அதனை நீங்கள் நுகரும் வாய்ப்பு ஏற்படலாம்.

முகக்கவசத்தை சரியான விதத்தில் அணிய வேண்டும். எல்லா முகக்கவசமும் ஒரே அளவில் இருப்பதில்லை. சில முகக்கவசங்கள் மூக்கின் கீழ் விழுந்து விடக்கூடியதாக உள்ளன. சிலர் அணியும் முகக்கவசம் வாய்ப் பகுதிக்கு மேல் இருக்கிறது.

இப்படிப்பட்ட முகக்கவசம் அணிவதால் ஒருவேளை உங்களுக்கு கிருமிப் பாதிப்பு இருந்தால் பொது இடங்களில் நீங்கள் இருமும் போது அல்லது தும்மும் போது கிருமிகள் வெளியில் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே நீங்கள் ஒவ்வொரு முறை முகக்கவசம் அணியும் போதும் அதனை கச்சிதமாக அணிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்ற அளவில் உங்கள் மூக்கு மற்றும் வாய்ப் பகுதியை முற்றிலும் மூடும்படி பார்த்துக் கொள்ளவும்.

முகக்கவசத்தை கிருமி நீக்கம் செய்வதற்கு இரசாயனங்களைப் பயன்படுத்த வேண்டாம். இதற்கு 'அல்ககோல் ஸ்ப்ரே' மட்டும் பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்துவதால் முகக்கவசத்தில் ஒட்டியிருக்கும் கிருமிகள் முற்றிலும் கொல்லப்படும். இதனை எப்போதும் உங்கள் கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள்.

வீட்டில் தயாரிக்கப்படும் முகக்கவசங்கள் பயன்படுத்தும் போது வழக்கமாக பயன்படுத்தும் சலவை பவுடர் மற்றும் சூடான நீர் கொண்டு சுத்தம் செய்யலாம். நன்றாக உலர வைத்து பின்பு பாதுகாப்பான இடத்தில் வைத்து பயன்படுத்தலாம்.

எல்லா முகக்கவசங்களும் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. சுவாசிக்கக் கூடிய வகையில் உள்ள துணி கொண்டு பின்பக்கமும், சற்று கடினமான துணி கொண்டு முன்பக்கமும் தயாரிக்கப்படுகின்றன. இதனால் வடிகட்டும் செயல்முறை சிறப்பாக இருக்கும். அதனால் முகக்கவசம் அணிவதற்கு முன் சரியாக பரிசோதித்து அணியவும்.


Add new comment

Or log in with...