வன்னி பிரதேசத்தில் களவாடப்படும் புராதன தொல்லியல் பொக்கிஷங்கள்! | தினகரன்

வன்னி பிரதேசத்தில் களவாடப்படும் புராதன தொல்லியல் பொக்கிஷங்கள்!

விஷமக் கும்பல்களிடமிருந்து நாட்டின் அரும்பொருட்களை பாதுகாக்குமாறு வேண்டுகோள்

வன்னிப் பிரதேசம் பண்டைய காலத்தில் சிற்றரசர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்ததாக இலங்கையின் வர லாறு கூறுகின்றது. மன்னர்கள் ஆட்சி செய்தமைக்கான வரலாற்று ஆதாரங்கள் தற்போதும் வன்னிப் பிரதேசத்தின் பல இடங்களில் காணப்படுகின்றன. நாட்டின் கடந்த கால வரலாற்றைக் கூறும் ஆதாரங்கள் உண்மையிலேயே பெறுமதி மிக்க பொக்கிசங்கள் ஆகும். இந்நிலையில் பண்டைக் காலத்து சின்னங்களை அபகரித்துச் செல்வதில் பல கும்பல்கள் ஈடுபடுவதாக இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

உள்ளுர்வாசிகளின் துணையுடன் வெளியிடங்களில் இருந்து வருவோர் இச்செயலில் ஈடுபட்டு வருகின்றனர். யுத்தம் தீவிரம் அடைந்திருந்த காலத்தில் புதையல் தோண்டும் செயல்கள் இங்கு இடம்பெறவில்லை.

வன்னிப் பிரத்தில் மீள்குடியேற்றம் இடம்பெற்றதன் பின்னர் புதையல் தோண்டும் செயல்கள் வேகமாக அதிகரித்துள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவ்வாறான ஒருசில சம்பவங்கள் பொலிசாரினாலும் விசேட அதிரடிப்படையினராலும் தடுக்கப்பட்டாலும் புதையல் தோண்டும் சட்டவிரோத செயல்களை முற்றாகத் தடுக்க முடியாதுள்ளது.

புதையல் தோண்டப்பட்டதற்கு ஆதாரமான குழிகள்பூசை செய்யப்பட்டதற்கான தடயங்கள் அங்கே காணப்படுகின்றன.

சில தினங்களுக்கு முன்னரும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் புத்துவெட்டுவான் கிராமத்தில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத புதையல் அகழ்வு தொடர்பாக தகவலை வெளியிட்ட வயதான பெண்மீது சந்தேக நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

புத்துவெட்டுவான் கிராமத்தில் இரண்டு இடங்களில் புதையல் அகழ்வு இடம்பெற்றுள்ளது. முதலாவது இடம் மருதம்குளத்தின் கட்டு முடிவடையும் பகுதியில் காணப்படுகின்றது.

இங்கு பாரிய கற்பாறைகளுக்கு இடையில் அகழ்வு இடம்பெற்றுள்ளது. இங்கு வெவ்வேறு வடிவக்கற்கள் காணப்படுகின்றன.

தோண்டப்பட்ட குழியின் கீழ்ப் பகுதியில் நீர் காணப்படுகின்றது. அருகில் பூசை செய்யப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன.

இவ்விடத்தில் தங்கக் கிடாரம் தங்கக் குத்துவிளக்கு போன்ற பொருட்கள் இருப்பதாக பரம்பரை பரம்பரையாக கதைகள் உலவி வந்தன. எனவேதான் கும்பலொன்று இக்காரியத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

இரண்டாவது இடமாக இந்த கிராமத்தின் மற்றும் ஒரு பகுதியான மணற்குளத்திற்கு அண்மையில் உள்ள பழைய குடியிருப்பு பகுதி உள்ளது. நான்கு கருங்கற்தூண்கள் நாட்டப்பட்ட பகுதிக்குள் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இந்தப் பகுதியில் பண்டைய கட்டடச் சிதைவுகளையும் காண முடிகின்றது.

இரண்டாவவது இடத்திற்குச் சென்ற பொலிசார் அங்கு காணப்பட்ட குழியை மாத்திரம் சிலரைக் கொண்டு மூடியுள்ளனர்.

வன்னியில் அழிவுறும் நிலையிலும் அபகரிக்கப்படும் நிலையிலும் உள்ள தொல்லியல் சின்னங்கள் மற்றும் புதைபொருட்களை பாதுகாப்பதற்கு தொல்லியல் துறைசார்ந்த வல்லுநர்களை உள்ளடக்கிய கட்டமைப்பு ஒன்றினை ஸ்தாபிப்பது இன்றிமையாததாகும்.

இக்கட்டமைப்பின் ஊடாக தொல்லியல் முக்கியத்துவம் மிக்க புதைபொருட்கள் அதிகமாக இருக்கும் பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட முடியும்.

புராதன இடங்களுக்கு உரிய பாதுகாப்பு வேலி இடப்படுவதால் பெறுமதிமிக்க தொல்பொருட்களை பாதுகாக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

-

முள்ளியவளை நிருபர்

 


Add new comment

Or log in with...