காலஞ்சென்ற ஆறுமுகன் தொண்டமானுக்கு நாளை அரச அஞ்சலி | தினகரன்


காலஞ்சென்ற ஆறுமுகன் தொண்டமானுக்கு நாளை அரச அஞ்சலி

காலஞ்சென்ற ஆறுமுகன் தொண்டமானுக்கு நாளை அரச அஞ்சலி-The remains of the Minister Thondaman Will Lie-in-State at the Parliament Premises

10.45 - 11.30 மணி வரை பாராளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்தில்

காலஞ்சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் மலையக உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு அரச அஞ்சலி செலுத்தும் நோக்கில் அன்னாரது பூதவுடல் நாளை (28) பாராளுமன்ற வளாகத்துக்குக் கொண்டுவரப்படவுள்ளது.

முற்பகல் 10.45 மணி முதல் 11.30 மணிவரை அன்னாரின் பூதவுடல் பாராளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அதன் பின்னர் 11.30 மணிக்கு பூதவுடல் பாராளுமன்ற வளாகத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள் மற்றும் எட்டாவது பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் காலஞ்சென்ற ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த விரும்பும் சகல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்துடன் இணைந்த திணைக்களங்களின் அதிகாரிகள், பாராளுமன்ற பணியாளர்கள் முற்பகல் 10.15 மணியளவில் பாராளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்துக்கு சமூகமளிக்குமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அறிவித்துள்ளார்.

காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்
1964ஆம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி பிறந்த ஆறுமுகன் தொண்டமான் அவர்கள், கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவராவார். மறைந்த மலையகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரரான இவர், 1985ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்தார். செளமியமூர்த்தி தொண்டமானின் தனிப்பட்ட செயலாளராக அரசியல் பயணத்தை ஆரம்பித்ததுடன், 1993ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் நிதிச் செயலாளராகவும், பின்னர் 1994ஆம் ஆண்டு அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் தெரிவுசெய்யப்பட்டார்.

இவர் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு முதன் முறையாகப் பாராளுமன்றத்துக்குத் தெரிவானார். அன்றிலிருந்து 26 வருடங்களாக தொடர்ந்தும் நுவரெலியா மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தெரிவுசெய்யப்பட்டார்.

சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவைத் தொடர்ந்து 1999ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பதவியை ஆறுமுகன் தொண்டமான் ஏற்றுக்கொண்டார். இவருடைய 26 வருட அரசியல் பயணத்தில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் கால்நடை அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு, இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி, கால்நடை மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் மற்றும் மலையக உட்கட்டமைப்பு அபிவிருத்தி உள்ளிட்ட அமைச்சுப் பதவிகளை வகித்திருந்தார்.


Add new comment

Or log in with...