ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியை மே 31இல்

- பாராளுமன்றம், சௌமியபவன், தொண்டமான் பங்களா, சி.எல்.எவ். வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்

மாரடைப்புக் காரணமாக காலஞ்சென்ற, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 31ஆம் திகதி நோர்வூட் மைதானத்தில் இடம்பெறும் என, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவர் எஸ். சத்தியவேல் தெரிவித்தார்.

நேற்று (26) திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக, தலங்கம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் காலமானார்.

03 பிள்ளைகளின் தந்தையான ஆறுமுகன் தொண்டமான், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்   நிறுவுனர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவுக்கு பின்னர், 1999ஆம் ஆண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1964.05.29ஆம் திகதி பிறந்த அவர், கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பதோடு, 1994ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். அன்று முதல் இன்று வரை  அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களில் பல்வேறு அமைச்சுகளை வகித்திருந்தார்.

கொழும்பு ஜயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடல் இன்று முற்பகல் பத்தரமுல்லையிலுள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, இன்று (27) பூராகவும் பத்தரமுல்லையிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுவதோடு,  நாளை (28) பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு வைக்கப்பட்டதன் பின்னர், பூதவுடல் கொழும்பு -03 மல்வத்தை வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமான சௌமியபவனிலும் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

நாளை மறுதினம் (29) கொத்மலை வேவண்டனிலுள்ளதொண்டமான்'பங்களாவிற்கு  கொண்டு செல்லப்பட்டு,   எதிர்வரும் 30ஆம் திகதி, கொட்டகலை சி.எல்.எவ். வளாகத்திற்குகொண்டு செல்லப்படும். எதிர்வரும் 31ஆம் திகதி, இறுதிச் சடங்குகள் நோர்வூட் மைதானத்தில் இடம்பெறும் என, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

(ஹற்றன்சுழற்சிநிருபர் – ஜி.கே. கிருஷாந்தன்)


Add new comment

Or log in with...