ஆறுமுகன் தொண்டமானின் இடத்திற்கு மகன் ஜீவன் தொண்டமான் | தினகரன்


ஆறுமுகன் தொண்டமானின் இடத்திற்கு மகன் ஜீவன் தொண்டமான்

ஆறுமுகன் தொண்டமானின் இடத்திற்கு மகன் ஜீவன் தொண்டமான்-Jeewan Thondaman Replaces Arumugan Thondamans Seat

- நுவரெலிய மாவட்ட வேட்பாளராக களமிறக்கப்படுவார்
- தேர்தலின் பின் தலைமைத்துவம் தொடர்பில் முடிவு
- ஆறுமுகன் தொண்டமானின் உடலுக்கு பலர் அஞ்சலி

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு, அவரது மகன் ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளதாக, இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இன்று (27) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

இந்த சந்திப்பின் போது, முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் எம். ரமேஷ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், சக்திவேல், பிலிப்குமார், இ.தொ.கா முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்ததாவது,

"தான் இல்லாத காலகட்டத்திலும் கட்சி, தொழிற்சங்க நடவடிக்கைகள் மக்களுக்காக தொடர்ந்தும் இடம்பெற வேண்டும் என தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஐயா எம்மிடம் பல தடவைகள் கூறியிருந்தார்.

இதன்படி காங்கிரஸின் உயர்மட்டக்குழு இன்றுகூடி, அடுத்தக்கட்ட நடவடிக்கை சம்பந்தமாக ஆராய்ந்தது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதால் அந்த இடத்துக்கு ஜீவன் தொண்டமானை நியமிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா காலமான பின்னர் கட்சி தலைமைத்துவம் சுமார் ஒருவருடம் வரை வெற்றிடமாக இருந்தது. எனவே, தேர்தல் முடிவடைந்த பின்னரே கட்சியின் தொண்டர்கள், உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அது சம்பந்தமாக தேசிய சபை முடிவெடுக்கும்.

தலைவரின் மறைவையடுத்து இரங்கல் தெரிவிப்பதற்காக பிரதமர் எம்மை இன்று அழைத்திருந்தார். இதன்படி சென்றோம். பொதுச்செயலாளரின் கையொப்பத்துடன் ஜீவன் தொண்டமானை போட்டியிட எடுக்கப்பட்ட முடிவை அறிவித்தோம். சிறந்த முடிவு என பிரதமரும் கூறினார்.

ஐயா சௌமியமூர்த்தி தொண்டமான், தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் கொள்கைகளை முன்னிறுத்தி காங்கிரஸ் மக்களுக்கு தொடர்ந்தும் சேவைகளை வழங்கும்." என்றார்.

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பலர் அஞ்சலி

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், வெளிநாட்டு தூதுவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் வதிவிடத்தில் அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஆறுமுகன் தொண்டமானின் உடலுக்கு பலர் அஞ்சலி-Political Leaders Visit Arumugan Thondaman Remains

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் ராதாகிருஷ்ணன், ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க உட்பட மேலும் பல அரசியல்வாதிகள் இன்று (27) அஞ்சலி செலுத்தினர்.

ஈடுசெய்ய முடியாத இழப்பு - சம்பந்தன் கருத்து
அஞ்சலி செலுத்திய பின்னர் ஊகடங்களிடம் கருத்து வெளியிட்ட இரா. சம்பந்தன்,

ஆறுமுகன் தொண்டமானின் உடலுக்கு பலர் அஞ்சலி-Political Leaders Visit Arumugan Thondaman Remains

"அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கென தனியான அரசியல் வரலாறு இருக்கின்றது. இலங்கையிலுள்ள அனைவரினதும் மதிப்பை பெற்ற அரசியல் தலைவர் அவர். அவருடன் நீண்டகாலமாக நெருங்கி பழகியிருக்கின்றோம். இவ்வாறுதான் மறைந்த ஆறுமுகன் தொண்டமானும் எம்முடன் இணைந்து ஒற்றுமையாக செயற்பட்டார்.

மலையக மக்களுக்கு தன்னால் இயன்ற விடயங்களை செய்துவந்தார். அவரது இழப்பு பேரிழப்பாகும். அது ஈடு செய்ய முடியாத இழப்பாகும். மிகவும் வேதனை அடைகின்றேன்.

அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மனைவி, பிள்ளைகள் உட்பட குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்." என்றார்.

இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே
" நேற்று மாலை 2 மணியளவில் திரு. ஆறுமுகன் தொண்டமானும் சுமார் ஒரு மணிநேரம் சந்திப்பு நடத்தினேன். மிகவும் பயனுள்ள சந்திப்பாக அமைந்திருந்தது. ஐந்து 5 நேரத்துக்கு பின்னர் அதிர்ச்சியளிக்கும் தகவல் கிடைத்தது. அவர் மறைந்துவிட்டார் என அறிந்ததும் வேதனை அதிர்ச்சியடைந்தேன்.

ஆறுமுகன் தொண்டமானின் உடலுக்கு பலர் அஞ்சலி-Political Leaders Visit Arumugan Thondaman Remains

மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய பல அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இந்திய வம்சாவளி மக்களின் தலைவர் என்ற வகையில் அக்கறையுடன் கலந்துரையாடினார். அன்னாரின் குடும்பத்தினருக்கு இந்திய அரசாங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும். அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட நாம் பங்காளர்களாக இருப்போம். தொண்டமானின் கனவு நனவாகும்." என்றார்.

துணிச்சல்மிக்க தலைவரை இழந்துவிட்டோம் - இராதாகிருஷணன்
அதேவேளை, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வீ. இராதாகிருஷ்ணன்,

ஆறுமுகன் தொண்டமானின் உடலுக்கு பலர் அஞ்சலி-Political Leaders Visit Arumugan Thondaman Remains

" அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் சுதந்திரத்துக்கு பின்னர் மலையக மக்கள் வழி நடத்தினார். அவரை தொடர்ந்து மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமை வழங்கினார். அவரின் இழப்பு மலையக மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும். அந்த இடைவெளியை எவராலும் நிரப்பமுடியாது.

அரசாங்கமாக இருந்தாலும், கம்பனிகளாக இருந்தாலும் தீர்மானமொன்றை எடுத்துவிட்டால் அதனை நிறைவேற்றுவதில் துணிச்சல்மிக்க தலைவராக செயற்பட்டவர். அவரின் இழப்பு பெரும் வேதனையை தருகின்றது." என்றார்

ஆறுமுகன் தொண்டமானின் உடலுக்கு பலர் அஞ்சலி-Political Leaders Visit Arumugan Thondaman Remains

ஆறுமுகன் தொண்டமானின் உடலுக்கு பலர் அஞ்சலி-Political Leaders Visit Arumugan Thondaman Remains

(ஹற்றன் சுழற்சி நிருபர் - கே. கிஷாந்தன்)


Add new comment

Or log in with...