ஐந்து மாதங்களுக்குள் நூற்றுக்கணக்கான அவதாரங்கள் எடுத்த கொரோனா வைரஸ்! | தினகரன்


ஐந்து மாதங்களுக்குள் நூற்றுக்கணக்கான அவதாரங்கள் எடுத்த கொரோனா வைரஸ்!

மரபணுவை அடிக்கடி மாற்றி நூற்றுக்கும் மேற்பட்ட அவதாரம் எடுத்துள்ள கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.கொரோனா பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும் என்பதுதான் நம் அனைவருடைய ஒரே கவலையாக இருக்கிறது.

அந்த அளவுக்கு அது உலகத்தையே ஆட்டிப் படைத்து வருகிறது. விஞ்ஞானத்தில் எவ்வளவோ வளர்ந்து விட்ட நாம், இதற்கு நிச்சயம் ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கி விடுவோம். இதன் மூலம் இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவோம் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் இருக்கிறது.

ஆனால் இந்த நம்பிக்கை சாத்தியமாகுமா? அல்லது பொய்த்துப் போகுமா? என்பதுதான் மிகப் பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது.

கொரோனா நோய் பரவுதல் சீனாவில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடங்கியது. இவ்வருடம் ஜனவரி மாதத்தில் உலகம் முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியது. அப்போதே இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கி விட்டார்கள். சுமார் 5 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் எந்த மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

பொதுவாக நோய்க் கிருமிகளை இரண்டு விதமான முறையில் அழிப்பார்கள். உடலுக்குள் மருந்துகளை வழங்கி கிருமிகளை நேரடியாக அழிப்பது ஒரு முறையாகும். மற்றொரு முறை என்பது உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்திகளை தூண்டி கிருமிகளை கொல்வதாகும்.

இப்போது இந்த இரு முறைகளையும் பயன்படுத்தி கொரோனா மருந்துகளை உருவாக்க முயற்சி நடக்கிறது. இதில் நேரடியாக செலுத்தும் ‘ரெம்டிசிவர்’ என்ற மருந்தை தற்போது அமெரிக்கா கண்டுபிடித்து உள்ளது. இந்த மருந்து 30 சதவீதம் நோயை கட்டுப்படுத்தும் பணியை செய்வதாக கூறுகின்றனர். ஆனாலும் இது ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கிறது.

ஏற்கனவே மலேரியா, காச நோய் போன்றவற்றுக்கு தடுப்பு மருந்துகள் உள்ளன. இதில் சில மாற்றங்களைச் செய்து கொரோனா மருந்து கண்டுபிடிக்கவும் முயற்சி நடக்கிறது.

அடுத்ததாக நோய் எதிர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி கிருமியை அழிக்கும் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.

இதைக் கண்டுபிடித்து விட்டால் உடலில் மருந்தை செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி கொரோனா கிருமிகளை அழித்து விடலாம். இதற்கான ஆராய்ச்சியும் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. அதில் அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட பல ஆய்வு நிலையங்கள் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளன.

அவற்றை விலங்குகளுக்கு மற்றும் மனிதர்களுக்கு செலுத்தி ஆய்வு செய்ய வேண்டும். அந்தப் பணிகளும் நடந்து வருகின்றன. அமெரிக்கா கண்டுபிடித்துள்ள மருந்தை 4 மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை நடத்தி வருகிறார்கள். இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த மருந்தும் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக தடுப்பு மருந்தை உடனடியாக உருவாக்கி விட முடியாது. சில வகை நோய்களுக்கு மருந்து கண்டு பிடிக்க 2 வருடத்திலிருந்து 5 ஆண்டுகள் வரை ஆகியுள்ளன. சில மருந்துகள் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

டெங்கு, சிக்குன்குனியா போன்றவற்றுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போது கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் இது கண்டிப்பாக நோயை குணப்படுத்தும், பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்பதை நிரூபிக்க வேண்டும்.

இதற்கு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மருந்து ஆய்வு அமைப்புகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பிறகுதான் மருந்து பயன்பாட்டுக்கு வரும். அதற்கு 18 மாதங்கள் வரை ஆகலாம் என்று கூறுகின்றனர். எனவே அடுத்த ஆண்டு மத்தியில்தான் மருந்து வரும் வாய்ப்பு இருக்கிறது.  ஒருவேளை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் கூட போகலாம். அந்த அளவுக்கு கொரோனா கிருமி வீரியம் கொண்டதாக இருக்கிறது.

பொதுவாக பக்டீரியா, வைரஸ்கள் ஆகியவற்றின் மூலம் மனிதனுக்கு நோய் உருவாகிறது. இதில் பக்டீரியா என்பது உயிருள்ள கிருமி ஆகும். இதை அழிப்பது எளிது. வைரஸ் என்பது படிகம் போன்றது. அது வெளியே இருக்கும் போது உயிர் இருக்காது. உடலுக்குள் சென்று விட்டால் உடனே உயிர் உருவாகி பரவத் தொடங்கி விடும்.

வைரஸ் என்பது டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ என்ற மரபணு மூலக்கூறுகளால் அமைந்துள்ளது. இதில் டி.என்.ஏ மூலக்கூறு மூலம் அமைந்துள்ள வைரஸ்கள் நிலையான தன்மை கொண்டதாக இருக்கும். அதன் மரபணு மாறாது.

ஆனால் ஆர்.என்.ஏ மூலக்கூறு இருந்தால் அதன் மரபணு அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். கொரோனா வைரசும் ஆர்.என்.ஏ மூலக்கூறு கொண்டதாக இருக்கிறது.

இதனால் அதன் மரபணுவை அடிக்கடி மாற்றிக் கொண்டு வருகிறது. முதலில் சீனாவில் பரவிய இந்த வைரஸ் இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட மரபணு மாற்றங்களை உருவாக்கி விட்டது. ஒவ்வொரு நாட்டிலும் அல்லது ஒரு நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மாறுபட்ட மரபணு கொண்ட கொரோனா கிருமிகள் காணப்படுகின்றன.

இந்தியாவில் கூட 5 வகையான மரபணு கொண்ட கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா ஆபிரிக்கா, ஐரோப்பா என ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு விதமான மரபணு கொண்ட கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இப்படி மரபணுவை அடிக்கடி மாற்றிக் கொள்வதால் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதில் சிக்கலை ஏற்படுத்தி விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஏனென்றால் தற்போதுள்ள வைரசை வைத்து அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டால் அது தனது மரபணுவை மாற்றி வேறுவித வீரியத்தை உருவாக்கி விட்டால் இந்த மருந்து வேலை செய்யாமல் போய் விடும்.

வைரசுக்கு தடுப்பு மருந்து பல முறைகளில் கண்டுபிடிக்கப்படுகிறது. முதலில் அந்த வைரசின் மரபணு குறியீட்டை முழுவதுமாக பகுத்து ஆய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டும். இது அதன் ‘புளூ பிரிண்ட்’ போன்றது. இதை ஏற்கனவே சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விட்டனர். அதன் மூலம் புதிய வைரசை ஆய்வு கூடத்திலேயே உருவாக்க முடியும்.

இவ்வாறு அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் கொரோனா வைரசை செயற்கையாக உருவாக்கி இருக்கிறார்கள். இவ்வாறு உருவாக்கப்படும் வைரஸில் மனிதன் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மூலக் கூறுகளை அகற்றி விட்டு உடலில் செலுத்துவார்கள்.

அதை நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலங்கள் நோய் எதிர்ப்பு ஊக்கியை (அன்டிபொடி) உருவாக்கி அந்த கிருமியை அழித்து விடும். இது ஒரு வகை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முறையாகும்.

இதேபோல வேறு முறையிலும் மருந்து தயாரிக்கலாம். இறந்து விட்ட வைரஸ் அல்லது வலுவிழந்த வைரஸ் ஆகியவற்றின் பாதிப்பு மூலக்கூறுகளை அகற்றி விட்டு மனிதனின் உடலில் செலுத்துவார்கள். அப்போது மனிதன் உடலில் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி அதை அழிக்கும்.  மற்றொரு முறையும் இருக்கிறது. ஏற்கனவே உள்ள வேறு வகை வைரசில் கொரோனா கிருமி மூலக்கூறுகளை செலுத்தி அதிலுள்ள பாதிப்பு மூலப்பொருளை அகற்றி விட்டு மனிதனின் உடலில் செலுத்துவார்கள். இவ்வாறும் மருந்து கண்டுபிடிக்கலாம்.

இது தவிர இன்னும் பல முறைகள் உள்ளன. இந்த ஆராய்ச்சிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. இது வெற்றியாக அமையுமா என்பதுதான் தெரியவில்லை.

எப்படியும் மருந்து கண்டுபிடித்து விட வேண்டுமென்று  விஞ்ஞானிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பதை தவிர வேறு வழி நமக்குத் தெரியவில்லை.


Add new comment

Or log in with...