நிதானமாக சிந்தித்த பின்னரே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதை முடிவு செய்ய வேண்டும் | தினகரன்

நிதானமாக சிந்தித்த பின்னரே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதை முடிவு செய்ய வேண்டும்

கல்விக்கு முன்னதாக மக்களின் உயிர்ப் பாதுகாப்பே பிரதானம்

‘இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் ஒழிக்கப்படவில்லை. அது படிப்படியாக ஒழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுதான் உண்மை. கொரோனாவை ஒழிக்க கங்கணங் கட்டிக் கொண்டிருக்கும் எம் போன்ற வைத்தியத்துறையினர் அதன் ஆபத்தை நன்கு உணர்வார்கள். உயிர்களைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். மற்றவை யாவும் இரண்டாம் பட்சமே ஆகும்’.

இவ்வாறு கூறுகிறார் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் எம். அச்சுதன்.

“உலக நாடுகள் யாவுமே கொரோனா அச்சத்திற்குள் தள்ளப்பட்டுள்ளன. நம் நாட்டில் பாதிப்பு குறைவாக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை பூச்சியத்திற்கு வரும் போதே நாம் தொற்றிலிருந்து மீண்டிருக்கிறோம் என்று கூறலாம். இது இலகுவான விடயமல்ல. இந்த வைரஸ்  நாட்டுக்கு நாடு தொற்றக் கூடியது. நமது நாடு ஒரு தீவாக இருப்பதால் பாரிய ஆபத்தில் இருந்து  தப்பியிருக்கிறோம்” என்று குறிப்பிட்டார் டொக்டர் அச்சுதன்.

 “நாளைக்கு என்ன நடக்கும் என்று யாராலும் எதிர்வு கூற முடியாதிருக்கிறது? இந்த நிலையில் பாடசாலைகளை மீளத் திறக்கும் விடயத்தில் சிக்கல்கள் உள்ளன. எண்ணித் துணிவது கருமம் என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். ஒரு செயலைச் செய்வதற்கு முன்பதாக நன்றாகச் சிந்திக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் அதனால் இழுக்கு ஏற்படும் என்பதை வள்ளுவர் வலியுறுத்துகிறார். எம்மைப் பொறுத்த வரை நாம் சரியாக கடமைகளை செய்வதில் பிரச்சினைகள் உள்ளன. எமக்கு ஆளணிப் பற்றாக்குறை இருக்கிறது. எமது பிரதேசத்தில் டொக்டர்கள் 254 பேர் இருக்க வேண்டும். ஆனால் இருப்பதோ 151 பேர்.  இக்குறையை முதலில் நிவர்த்தி செய்ய வேண்டும். அப்போதுதான் வினைத்திறன் மிக்க சேவையை வழங்க முடியும்? ஆனால் இவ்வாறான குறைபாடுகளை வைத்துக் கொண்டு நாம் சேவை செய்து வருகிறோம்.   வைத்தியர்களாகிய நாம் நாட்டிலுள்ள 25 மாவட்டங்களையும் கொரோனா விடயத்தில் கட்டுப்பாட்டுப் பொதிக்குள்ளே வைத்திருக்கிறோம். ஊரடங்கு  நீடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சில மாவட்டங்களில் இக்கட்டுப்பாட்டில்  தளர்வு காணப்படுகிறது. இனிமேல் வரப் போவது மாரி காலம். டெங்கு அச்சுறுத்தலும் தோன்றப் போகிறது. இதற்கும் எமது மக்கள் முகம் கொடுக்க வேண்டும். இது இன்னும் ஒரு புதிய ஆபத்தை தோற்றுவிக்கப் போகிறது” என்று டொக்டர் அச்சுதன் மேலும் கூறினார்.

 “நமக்கு இப்போது ஒரு புதிய பிரச்சினை தோன்றியிருக்கிறது. அதாவது பாடசாலைகளை மீளவும் திறப்பது அப்பிரச்சினையாகும். கல்விச் செயற்பாடுகளை மீளவும்  ஆரம்பிப்பது அவசியம். ஆனால் அதில் உள்ள ஆபத்துகள் இன்று அதிகம்.

கல்விச் செயற்பாடு மனித வளத்தை அபிவிருத்தி செய்வதற்கானது. அதுவும் இளமையில்தான் கல்வி கற்க வேண்டும். இங்கு நான் வலியுறுத்துவது என்னவென்றால் கல்விக்கு முன்பதாக உயிர்களைப் பாதுகாக்க வேண்டும். உயிர்ப் பாதுகாப்புதான் முதலில் முக்கியம்.

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர்  மன்சூர் மாணவர்களின் கல்வியை மேம்படுத்த எடுத்து வருகின்ற முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. அவர் பதவியேற்ற பிறகு கிழக்கு மாகாணம் கல்வியில் முன்னேறியுள்ளது. ஆனால் பாடசாலைகள் மீளத் திறக்கப்படுமானால் அவருக்கு பொறுப்புகள் குவிந்து விடும். பாடசாலைகளை  மீண்டும் திறக்க எடுக்கும் முயற்சி பெற்றோர் மத்தியில் ஒரு அச்ச உணர்வைத் தோற்றுவித்துள்ளது.  

நாம் அனைவரும் உயிரோடு விளையாடாதிருக்க எண்ண வேண்டும். கொரோனாவுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.  நாம் அதிலிருந்து தப்பும் அறிவுரைகளையே கூறி வருகிறோம்.

சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி கழுவுதல். தொடுதலைத் தவிர்த்துக் கொள்ளல் என்றெல்லாம் சுகாதாரத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் சகிதம் பாடசாலைகள் திறக்கப்பட்டால் இந்த அறிவுரைகளை மாணவர்கள் கடைப்பிடிப்பார்களா? மாணவர்கள் மத்தியில் நோய் பரவாதா?

இவ்வாறான வினாக்கள் இங்கு தோன்றுகின்றன. கிழக்கு மாகாணத்தில் மட்டும் 1111 பாடசாலைகள் இருக்கின்றன.

ஆசிரியர்கள் சுமார் 21 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். மாணவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 90 ஆயிரம் ஆகும். இந்த நிலையில் கொரோனா பரவுவது எவ்வளவு இலகுவானது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த ஆபத்தை கல்விப் பகுதிக்குப் பொறுப்பான அனைவரும்   சிந்தித்துப் பார்க்க வேண்டும். மாணவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் நிலைமை விபரீதமாகி விடும். எனவே பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதென்பது நிதானமாக சிந்திக்க வேண்டியதாகும்.”

இவ்வாறு கூறுகிறார் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் எம். அச்சுதன்.

எஸ்.எஸ். தவபாலன் - புளியந்தீவு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...