திருநர்களுக்கும் சம உரிமை வேண்டும்

சமூக ரீதியான புறந்தள்ளல்கள் அல்லது ஒடுக்குமுறைகள் என்பது ஆரம்ப காலத்தில் இருந்தே பல்வேறு சமுதாயக் குழுக்களுக்கு எதிராக சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார ரீதியான கட்டமைப்புக்கள் சார்ந்து  பல்வேறு பரிணாமங்களில் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. இன்றும் அதன் தொடர்ச்சியான தாக்கத்தை உணரமுடிகின்றது. இதற்கு திருநர்களும் விதிவிலக்கல்ல.

அவர்களது போராட்டங்களை நோக்குமிடத்து வரலாறு  கூறும் காலந்தொட்டு இன்றுவரை திருநர் சமுதாயத்தின் உரிமைகள் மறுக்கப்பட்டுவருவதுடன் கேலி, கிண்டல் பேச்சுக்கும் இலக்காகி இன்னும்  பலவிதமான ஒடுக்குமுறைக்கு உள்ளாகிக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர் .

அவ்வகையில் நம் இலங்கைத் தேசமானது திருநர் பற்றிய பூரண  விழிப்புணர்வு அற்ற தேசமாகவே விளங்கிவருகிறது. இங்கே திருநர்களது அடிப்படை உரிமைகள் கூட  மறுக்கப்பட்டவர்களாகவும் அரசினதும் சமூகத்தினதும் பல்வேறுபட்ட ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டவர்களாகவுமே வாழ்ந்து வருகின்றனர்.

இங்கும் ஏனைய நாடுகளைப் போலவும் திருநர்களுக்கான எதிர்ப்புக்களும், பிரச்சினைகளும் அவர்களின் வீட்டிலேயே  தான் தொடங்குகிறது. பெற்ற தாய், தந்தை, சகோதரர்கள் அவர்களை  வெறுத்து ஒதுக்குகிறார்கள். சிலரை வீட்டைவிட்டும் துரத்துகிறார்கள். இதனால்  இவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். வெளியுலகைத் தைரியமாக எதிர் கொள்கின்ற மனோபலத்தையும் இழக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து பாடசாலையிலும் அவர்களுக்கு  பிரச்சினைகள் தான் அதிகமாக இருக்கின்றது. திருநர்கள் பதின்ம வயதில் எதிர்நோக்குகின்ற பாலின மாற்றம் காரணமாக உடல் உள மாற்றங்களினால் சக மாணவர்களுக்குத் தம்மை  வெளிப்படுத்தும்போது அவர்களினால் கேலி, கிண்டல், பகிடிவதைகளுக்கு முகங்கொடுக்கின்ற துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.  

சில மாணவர்கள் திருநர்களுடன் பேசாமல் முற்றாகவே அவர்களை ஒதுக்குகின்றனர். அதேவேளை சில ஆசிரியர் கூட அவமானப்படுத்துவதுடன் சில வேளைகளில்   பிற மாணவர்கள் மற்றும் ஒரு சில ஆசிரியர்களினால்  பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும்  உட்படுத்தப்படுகின்றனர். அவர்கள் தம்மிலேற்படும்  பாலின மாற்றம் காரணமாகக் கல்வியில் ஈடுபாடு காட்ட முடியாது தவிக்கும் வேளையில் இதுபோன்ற பிரச்சினைகளாலும் மேலும் மனதளவில் உடைந்து விடுகின்றனர்.  இதனால் அவர்கள் தமது பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படுகின்றது. திருநர்கள் கல்வியைப் பூரணப்படுத்தாமைக்கு இவையே முக்கிய காரணங்களாகும்.

இன்றும் கூட இவ்வாறான பிரச்சினைகள் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. எனினும் இவ்வாறான பல ஒடுக்குமுறைகளையும் தடைகளையும்  எதிர்கொண்டு ஒரு சில திருநர்கள் கல்வியைப் பூரணப்படுத்துகின்ற போதிலும் அடுத்த கட்டமாக அவர்களுக்கான  உயர்கல்வி வாய்ப்புகளோ அல்லது அரச  வேலை வாய்ப்புகளோ கிடைப்பதில்லை. இதனால் இவர்கள் நிலை என்னவென்று தெரியாமல் வாழ்க்கையில் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு சிலர் சுய தொழில் வேலைவாய்ப்புகள் மூலம் முன்னேறிக் கொண்டு வருகின்றார்கள். இன்னும் சிலர் தனியார் நிறுவனங்களுக்கு  வேலைக்கு செல்லும் போதும் அங்கும் நிராகரிக்கப்படுகிறார்கள்.

 சிலர் வேலை செய்கின்ற இடங்களில் வேலை செய்கின்ற எனைய  ஊழியர்களினால்   பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளுக்கும் நெருக்கடிகளுக்கும்  உள்ளாக்கப்படுகின்றனர்.

இவ்வாறான பிரச்சினைகள் இலங்கையில் மட்டுமின்றி ஏனைய நாடுகளிலும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. இலங்கையில் திருநர்கள் மிகப்பெரும் ஒடுக்குமுறைகளுக்கும்  கேலி, கிண்டல் போன்ற சித்திரவதைகளுக்கும் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டவர்கள் ஆகவும் காணப்படுகிறார்கள். 21ம் நூற்றாண்டிலும்  இந்த நிலை தொடர்கின்றதெனில் முற்காலத்தில் அவர்கள் நிலை இன்னும் மோசமாக இருந்திருக்கும் என அனுமானிக்க முடிகின்றது. பெண்ணுரிமை பற்றிப் பேசிய பெரியாரிடம் ஒருமுறை 'பெண்ணுரிமை என்றால் என்ன? என்று கேட்ட போது சராசரி ஆண்களுக்கு உள்ள உரிமைகள் யாவும்  பெண்களுக்கு கிடைக்க வேண்டும் அதுவே பெண்ணுரிமை' என்று கூறினாராம். அதுபோலவே தற்காலத்தில் திருநர்கள்  நிலையும் உள்ளது.

ஆண்களுக்கு வழங்கப்படுகின்ற உரிமைகள் அனைத்தும்  பெண்களுக்கும் திருநர்களுக்கும்   வழங்கப்படவேண்டும்.

திருநர்கள் சராசரி மனிதர்களாக மதிக்கப்படவேண்டும். அவர்களுக்கும் வாழ்வில் முன்னேறுவதற்கு வழி ஏற்படுத்தப்பட வேண்டும். எனவே நாம் அனைவரும் திருநர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கவேண்டும். அனைவரும் ஒன்றிணைவோம். எமது உரிமைகளை வெல்வோம்.

பாடசாலைகளில் திருநர்கள் சுதந்திரமாகக் கல்வி கற்பதற்கான உரிமை, பல்கலைக்கழங்களில் திருநர்களுக்கான இட ஒதுக்கீடு, திருநர்களுக்கான அரசு மற்றும் தனியார்  வேலைவாய்ப்புகள், திருநர்களுக்கான அடிப்படை உரிமை வசதிகள், திருநர்களுக்கான சட்ட அங்கீகாரங்கள், அரச மானியங்கள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள். இவ்வாறான விடயங்களில் அரசு மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இதற்காக  நாம் அனைவரும் ஒன்றாக ஓரணியில் திரண்டு குரல் கொடுப்போம்.


Add new comment

Or log in with...