பயனற்றுக் கிடக்கும் எழில்மிகு பிரதேசம் வன்னேரிக்குளம் | தினகரன்


பயனற்றுக் கிடக்கும் எழில்மிகு பிரதேசம் வன்னேரிக்குளம்

போரினால் அழிவுண்டு சின்னாபின்னமாகிப் போயிருந்த பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான அபிவிருத்திப் பணிகளில் அதிகளவானவை மக்களுக்குப் பயனுள்ளதாக அமைந்தாலும், சில அபிவிருத்திப் பணிகள் உரிய முறையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படவில்லை. அவை மக்களுக்கு பயனற்றதாகவே அமைந்து விடுகின்றன.

கிளிநொச்சி நகரத்தின் மேற்குப் புறத்தில் இயற்கை அழகு நிறைந்த பகுதிகளில் ஒன்றாக வன்னேரிக்குளம் பிரதேசம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசம் இயற்கை எழில் மிகுந்த பகுதியாகவும் சுற்றுலாப் பயணிகளை கவரக் கூடிய இடமாகவும் காணப்பட்டாலும் குறித்த பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று  வரக் கூடிய வகையில் வீதிகளோ அல்லது போக்குவரத்து வசதிகளோ கிடையாது.

சுற்றுலாப் பயணிகள் சென்று தங்கக் கூடிய வசதிகள் அங்கில்லை. உணவு வகைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய உணவகங்கள் எதுவுமே இதுவரை இல்லாத பகுதியாகவே அப்பிரதேசம் காணப்படுகின்றது.

நகரத்திலிருந்து மேற்குப் புறமாக அக்கராயன்குளம், ஆனைவிழுந்தான், ஸ்கந்தபுரம், கோணாவில், வன்னேரிக்குளம் ஆகிய கிராமங்களில் அதிகளவான மக்கள் தொன்றுதொட்டு இன்று வரை வாழ்ந்து வருகின்றனர்.

இந்தக் கிராமங்களுக்கான பிரதான வீதியாகக் காணப்படும் கிளிநொச்சி - வன்னேரிக்குளம் வீதி இன்று வரையும் புனரமைக்கப்படாத ஓர் வீதியாகவே காணப்படுகிறது.

போக்குவரத்துகளில் இப்பகுதி மக்கள் பெரும் துன்பதுயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், வன்னேரிக்குளம் பிரதேசத்தில் பல மில்லியன் ரூபா செலவில் கடந்த 2017ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட சுற்றுலா மையம் இன்று எதுவித பயன்பாடுமற்று அதன் கட்டுமானங்களும் சிதைவடைந்து காணப்படுகின்றது.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் அமைச்சின் கீழான அபிவிருத்தி நிதியின் கீழ் சுமார் ஆறு மில்லியன் ரூபா செலவில் கரைச்சி பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி மேற்படி சுற்றுலா மையம் திறந்து வைக்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை இது பயன்பாடற்ற நிலையில் காணப்படுவதுடன் அக்கட்டடத்தின் கதவுகள், யன்னல்கள், நீர்விநியோகக் குழாய்கள், மின்இணைப்புக்கள் என்பன களவாடப்பட்டும் சேதமாக்கப்பட்டும் காணப்படுகின்றன.

இதை விட கடந்த காலங்களில் சட்டவிரோத செயற்பாடுகளும் கலாசார சீரழிவுகளும் அங்கு இடம்பெற்றதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பெருந்தொகை நிதியை செலவிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த அபிவிருத்திப் பணிக்கான நிதி  விழலுக்கு இறைத்த நீர் போன்றே அமைந்துள்ளது.

இது திறந்து வைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதும், இதன் எஞ்சியுள்ளவற்றை பாதுகாக்கவோ அல்லது இதற்கான மாற்றுவழிகளை கையாளவோ இதனை நிர்வகித்தவர்களால் முடியவில்லையா என்று பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சு.பாஸ்கரன் - பரந்தன் குறூப்நிருபர் 


Add new comment

Or log in with...