ரஷ்யாவிலிருந்து 181 பேர் வருகை

இலங்கைக்கு வர முடியாமல், ரஷ்யாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 181 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம், இன்று (25) அதிகாலை மொஸ்கோ நகரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1206 எனும் விசேட விமானம்,  ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து இன்று அதிகாலை 5.50 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

குறித்த விமானத்தில் பயணித்த அனைத்துப் பயணிகளும், அவர்களின் பயணப் பொதிகளும், விமானப் படையினரால் தொற்றுநீக்கம் செய்யப்பட்டது.

இதன் பின்னர், குறித்த பயணிகளின் உடல் வெப்பநிலை அளவிடப்பட்டதோடு, அவர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஏதேனும் அறிகுறிகள் தென்படுகின்றதா என்பது தொடர்பில்  விமான நிலைய சுகாதார வைத்திய பிரிவு அதிகாரிகளும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும் பரிசோதனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, இராணுவத்தினரால் தயார்ப்படுத்தி வைக்கப்பட்டிருந்த விசேட பஸ் வண்டியில், தனிமைப்படுத்தலுக்காக இக்குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இரண்டாவது தொகுதியினர் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர், கடந்த 22ஆம் திகதி இரவு 10.54 மணிக்கு,  இலங்கையர்கள் 261 பேர், ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் மூலம்  ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். 


Add new comment

Or log in with...