யாழ்ப்பாணத்தில் கடும் காற்று; 79 வீடுகள் பலத்த சேதம் 658 பேர் பாதிப்பு | தினகரன்


யாழ்ப்பாணத்தில் கடும் காற்று; 79 வீடுகள் பலத்த சேதம் 658 பேர் பாதிப்பு

நஷ்டஈடு வழங்க நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் வீசிய கடுமையான காற்றின் காரணமாக வீடுகள் சேதமடைந்தோருக்கு நஷ்டஈடு வழங்கப்ப டவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக மேலும் கூறுகையில்,

21ஆம் திகதியில் இருந்து சற்று காற்று அதிகரித்து காணப்பட்டது. புயல் அபாயத்தை தொடர்ந்து காற்று மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசியதன் காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 79 வீடுகள் சேதமடைந்துள்ளன. அதில் ஒரு வீடு முழுமையாகவும் மிகுதி 78 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருக்கிறது. அதேபோல் 204 குடும்பங்களைச் சேர்ந்த 658 பேர் 3 நாள் வீசிய காற்றின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கைதடி கலைவாணி வித்தியாலய பாடசாலை கட்டடம் ஒன்றும் சேதத்திற்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பளை பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்து ஒரு பெண்மணி காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறார். சிறு முயற்சியாளர்களுடைய தொழில் பாதிப்படைந்துள்ளதுள்ளன. 6 பேரது தொழில் பாதிப்படைந்துள்ளது.

ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காற்றின் காரணமாக மரம் ஒன்று முறிந்து விழுந்து அவரது படகு சேதமடைந்துள்ளது. கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகளவில் வாழை செய்கை மற்றும் பப்பாசி செய்கை பாதிப்படைந்துள்ளன.

எனினும் வீடுகள் பாதிப்படைந்த அனைவருக்கும் நஷ்ட ஈடு வழங்குவதற்கான முயற்சிகள் மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தொழில் முயற்சி பாதிக்கப்பட்ட சிறு முயற்சியாளர்களுக்கும் நஷ்டஈடு வழங்குவதற்குரிய முயற்சிகள் மாவட்ட செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காற்றின் பாதிப்பு தொடர்பான அறிக்கையினை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம். அத்தோடு தொழில் முயற்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் ஏதாவது உதவிகள் வழங்க முடியுமா எனவும் நாம் ஆராய்ந்து வருகின்றோம் என்றார்.

பருத்தித்துறைவிசேடநிருபர்


Add new comment

Or log in with...