நாட்டில் விவசாய அபிவிருத்தியை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் | தினகரன்


நாட்டில் விவசாய அபிவிருத்தியை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்

ஐ.தே.க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.விஜேதுங்க பேட்டி

‘அனைத்து அரசியல்வாதிகளும் தத்தமது தனிப்பட்ட எண்ணங்களின்படி செயற்படுவதை நிறுத்தி நேர்மையாக, தமது மனசாட்சிக்கு ஏற்றவாறு நாட்டையும் மக்களையும் எண்ணி புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட வேண்டும். குறுகிய எண்ணத்திலிருந்து அனைவரும் விடுபட வேண்டும் பொதுத் தேர்தலில் எந்த அரசாங்கம் ஆட்சியை அமைத்தாலும் குறைந்த பட்சம் நாடு ஓரளவு உயர்ந்த பொருளாதார  சமூக மட்டத்தை அடையும் வரை அனைவரும் அரச தலைவருடன் இணைந்து ஒற்றுமையாக நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்’.

இவ்வாறு கூறுகிறார் இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ. விஜேதுங்க.

கேள்வி: கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டில் சுயஉற்பத்தி நடவடிக்கையின் தேவை ஏற்பட்டுள்ளதல்லவா?

பதில்: உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால் உலகில் அனைத்து நாடுகளுக்கும் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையும் அந்த பொருளாதார பாதிப்பிலிருந்து தப்ப முடியாது. ஏற்றுமதி இறக்குமதி பொருளாதாரத்தில் அதிகமாக தங்கியுள்ள இலங்கையின் பொருளாதாரத்துக்கு உலக பொருளாதார வீழ்ச்சி மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலைமையில் குறிப்பிட்டளவு பாதுகாப்பை உள்ளூர் பொருளாதாரத்துக்கு பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றால் சுய உற்பத்தி நடவடிக்கையை வலுவானதாகவும் விஞ்ஞான ரீதியாகவும் மேற்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். அரசாங்கம் அதற்கான திட்டங்களை தயாரிக்க வேண்டும். அதற்குத் தேவையான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்

கேள்வி: மக்களுக்கு பாதுகாப்பை வழங்கி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல நீங்கள் வழங்கும் ஆலோசனைகள் எவை?

பதில்:  எம் அனைவருக்கும் கடந்த கால நடவடிக்கைகள் குறித்து மீண்டும் சிந்திக்க இயற்கை வழங்கியுள்ள சந்தர்ப்பம் இதுவாகும். சுயநலத்தை புறந்தள்ளி நேர்மையான எண்ணத்துடன் மக்களையும் நாட்டையும் இவ்வேளையில் பாதுகாக்க முடியாமற் போனால் இயற்கை எமக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் வழங்காமற் போகலாம். அனைத்து அரசியல்வாதிகளும் தத்தமது தனிப்பட்ட எண்ணங்களின்படி செயற்படுவதை நிறுத்தி நேர்மையாக தமது மனசாட்சிக்கு ஏற்றவாறு நாட்டையும் மக்களையும் எண்ணி புதிய அரசியல் கலாசாரம் ஒன்றினை ஆரம்பிக்க திட்டமிட வேண்டும். பொதுத் தேர்தலில் எந்த அரசாங்கம் ஆட்சியை அமைத்தாலும் குறைந்த பட்சம் நாடு ஓரளவு உயர்ந்த பொருளாதார சமூக மட்டத்தை அடையும் வரை அனைவரும் அரச தலைவருடன் இணைந்து ஒற்றுமையாக நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இவ்வேளையில் அரசாங்கம் செலவுகளை முடிந்தளவு குறைத்து மக்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்ப பயன்படுத்த வேண்டும்.

கேள்வி: மக்கள் பாடசாலைகள் எப்போது ஆரம்பிக்கப்படும் என வினைவுகின்றார்களே?

பதில்: கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையால் பாடசாலைக் கல்வியில் நிகழ்ந்துள்ள பாதிப்பை குறையாக மதிப்பிட முடியாது. ஆனால் கல்வி நடவடிக்கைகளில் இது பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் எமது பிள்ளைகளையும் நோய்த் தொற்றியிருந்து பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.

அதனால் இவ்வேளையில் அவசரப்பட்டு பாடசாலைகளை திறக்காமல் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செயற்படுவதே நல்லது. அதற்காக பொருத்தமான திட்டங்களைத் தயாரிக்க வேண்டும். தற்போது அநேக பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘ஒன்லைன்’ கற்பித்தல் முறை எமது நாட்டுக்குப் பொருந்தாதது என கூற வேண்டும்.

கேள்வி: நாடுபூராவும் வீட்டுத் தோட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் குறைநிறைகள் மற்றும் வீட்டுத் தோட்டத்தின் பெறுமதி குறித்தும் என்ன குறிப்பிட விரும்புகின்றீர்கள்?

பதில்:  தமக்குத் தேவையானவற்றை தாமே நிறைவேற்றிக் கொள்வது மிக நல்லது. தமது வீட்டுத் தோட்டத்தில் தமக்குத் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் குடும்ப பொருளாதாரத்துக்கு பெரும் வலு கிடைக்கும். அதேவேளை பொருளாதார ரீதியாwகவும் நன்மை பயக்கும். பசுமையான மரக்கறிகளை தமது வீட்டுத் தோட்டத்திலேயே பெற்றுக் கொள்வதால் மக்களின் சுகாதாரமும் பாதுகாக்கப்படும்.

கேள்வி: தற்போது விவசாயிகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் எவை?

பதில்: விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்வடையச் செய்வதன் மூலம் விளைச்சலை அதிகரிக்கச் செய்யலாம். எமது நாட்டில் அநேகமான விவசாயிகள் மிகவும் குறைந்த வாழ்க்கை மட்டத்தையே கொண்டுள்ளார்கள். இடைத்தரகர்களால் விவசாயிகள் சுரண்டப்படுகின்றார்கள். விவசாயிகளுக்காக பெற்றுக் கொடுக்கப்படும் சலுகைகள் அரசியல் நோக்கமின்றி தற்போதுள்ளதை விட சரியான முறையில் வழங்கப்பட வேண்டும். விவசாயிக்கு சிறந்த மதிப்பை அளிக்க வேண்டும்.

கேள்வி:  இலங்கை மக்கள் இச்சந்தர்ப்பத்தில் வெகுவிரைவாக குளங்களை புனர்நிர்மாணம் செய்ய வேண்டுமென கூறுகின்றார்கள். அதற்காக நீங்கள் வழங்கும் ஆலோசனைகள் எவை?

பதில்: விவசாயத்தில் அபிவிருத்தியை எதிர்பார்ப்பதாகவிருந்தால் நிச்சயமாக குளங்களை புனர்நிர்மாணம் செய்ய வேண்டும். அதில் எதுவித விவாதமுமில்லை. விவசாயத்தின் முதுகெலும்பு நீர்ப்பாசனமாகும். குளங்கள், கால்வாய்களை புனர்நிர்மாணம் செய்வதற்காக தொழில்நுட்ப ரீதியான விரைவான நடவடிக்கைகள் எடுக்காமல் விவசாய அபிவிருத்தியை எதிர்பார்ப்பது வெறுங் கனவாகும்.

கேள்வி: அரசாங்கம் ஏதேனும் வரவு செலவு திட்டத்தை முன்வைத்த பின்னர் வருட நடுப்பகுதியில்தான் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நிதி கிடைக்கும். அதனால் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்படுமென்ற கருத்து நிலவுகின்றதல்லவா?

பதில்:  எமது நாட்டில் இன்னும் விஞ்ஞான ரீதியான அபிவிருத்தி திட்டங்களை தயாரித்தல், செயற்படுத்தல் மற்றும் வழிநடத்தல் மேற்கொள்ளப்படுவதில்லை.

அரசியல்வாதிகள்  இதுவரை அறிந்திராத இவ்வாறான மறைக்கப்பட்ட நிலைமைகளை சரியாக அறிந்து திருத்திக் கொள்ள வேண்டும். சாதாரணமாக வருடத்திற்காக தயாரிக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக அவ்வருட ஆரம்பத்தில் நிதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

ஆனால் அநேகமான எமது திட்டங்களுக்கு அனுமதி காலந்தாழ்த்தியே கிடைக்கின்றது. அதனாலேயே பல திட்டங்கள் தோல்வியடைகின்றன. ஒவ்வொரு திட்டத்துக்கும் காலத்தை சரியாகக் கணித்து பணத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும்.


Add new comment

Or log in with...