ஆபத்துக்குள்ளான மீனவர் படகுகளை அடைந்த கடற்படை கப்பல் | தினகரன்


ஆபத்துக்குள்ளான மீனவர் படகுகளை அடைந்த கடற்படை கப்பல்

அம்பன் சூறாவளி தாக்கம் காரணமாக பாதுகாப்புக் கருதி இந்தோனேஷியாவை  அண்டிய கடற்பரப்பை நோக்கி செலுத்தப்பட்ட பலநாள்   மீன்பிடிப் படகுகளுக்கு, அத்தியாவசியமான எரிபொருள் உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்காக புறப்பட்டிருந்த இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ‘சமுதுர’ எனும் கப்பல், அப்படகுகளை நெருங்கியுள்ளது.

‘சமுதுர’ எனும் கப்பல், குறித்த பலநாள் மீன்பிடிப் படகுகளுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக, கடற்டையினர் தெரிவித்தனர்.

சீரற்ற காலநிலை, அம்பன் சூறாவளி  காரணமாக, இலங்கைக்கு சொந்தமான 30 பலநாள் மீன்பிடிப் படகுகள், இந்தோனேஷியாவை அண்டிய கடற்பரப்பை நோக்கி செலுத்தப்பட்டிருந்தன. அம்பாந்தோட்டை மற்றும் காலி மாவட்டங்களிலிருந்து சென்ற குறித்த மீன்பிடிப் படகுகளுடன் 180 மீனவர்கள் சிக்கியுள்ளனர். 

கடந்த சில தினங்களாக ஏற்பட்ட சூறாவளி நிலைமையில், ஆழ் கடலுக்குச் சென்ற நிலையில், தாழமுக்க வலயத்திற்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த 30 மீனவப் படகுகள் பேராபத்திலிருந்து காப்பற்றப்பட்டதாக, மீன்பிடி திணைக்களம் தெரிவித்திருந்தது.

மீன்பிடி திணைக்களத்தினால் வானொலி அலைவரிசை மூலம் வழங்கப்பட்ட ஆலோசனைகளைப் பின்பற்றியதன் மூலம், புயலிலிருந்து தப்பித்து இந்தோனேஷியா கடற்பரப்பை நோக்கி அவர்களை அனுப்பியதன் மூலம், ஏற்படவிருந்த அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக மீன்பிடித் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 


Add new comment

Or log in with...