இரு யுவதிகளை கௌரவ கொலை செய்தவர் கைது | தினகரன்


இரு யுவதிகளை கௌரவ கொலை செய்தவர் கைது

பாகிஸ்தானில் இளம் பெண்களை கொலை செய்த சந்தேகத்தில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட பெண்களுக்கு அவர் முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் பரவியதை அடுத்தே அவர் பிடிபட்டுள்ளார்.

முகமது அஸ்லம் என்ற அந்த ஆடவர் தமது உறவினப் பெண்களான 18 மற்றும் 16 வயது யுவதிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதனை வீடியோ எடுத்த கைபேசியின் உரிமையாளர் மற்றும் கொல்லப்பட்ட பெண்களின் உறவினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் 52 விநாடிகள் கொண்ட அந்த வீடியோ எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட ஓர் ஆண்டை எட்டிய நிலையில் கடந்த ஒருசில வாரங்களிலேயே அது வைரலாகியுள்ளது.

கர்யோம் பிராந்தியத்தின் ஷம்ப்லான் கிராமத்தில் கடந்த வாரம் இந்த யுவதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் கௌரவக் கொலை செய்யப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த கொலை தொடர்பில் பொலிஸாருக்கு முறையிடத் தவறிய கொல்லப்பட்ட ஒரு யுவதின் தந்தை மற்றும் மற்றைய யுவதியின் சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான சுமார் ஆயிரம் கௌரவக் கொலை சம்பவங்கள் பதிவாவதாக செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

 


Add new comment

Or log in with...