தென் சூடானில் சமூகங்களிடையே மோதல்: 300 பேர் வரை உயிரிழப்பு

தென் சூடானில் சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட புதிய மோதல்களில் குறைந்தது 300 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

ஜொங்லெய் மாநிலத்தில் பல டஜன் வீடுகள் அழிக்கப்பட்டு மற்றும் உதவிக் குழுக்களின் களஞ்சிய இடங்கள் களவாடப்பட்டிருப்பதோடு பெண்கள் மற்றும் கால்நடைகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் மூன்று தொண்டுப் பணியாளர்களும் உள்ளனர். தென் சூடானில் ஆறு ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டபோதும் சமூகங்களுக்கு இடையிலான வன்முறைகள் பல தடவைகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த பெப்ரவரி தொடக்கம் இவ்வாறான வன்முறைகளில் சுமார் 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் வட கிழக்கு நகரான பீரியில் கால்நடை மேய்ப்பாளர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு இடையே கடந்த சனிக்கிழமை புதிய வன்முறை வெடித்துள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இதில் பலரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே கொல்லப்பட்டிருப்பதாக சுகாதார பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்த சிலர் மருத்துவ சிகிச்சைக்காக தலைநகர் ஜுபாவுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...