அமெரிக்க பங்குச் சந்தையிலிருந்து சீன நிறுவனங்களை அகற்ற செனட் ஒப்புதல்

அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் இருந்து சீன நிறுவனங்கள் சிலவற்றைத் தடைசெய்ய அனுமதிக்கும் சட்ட மூலத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

குடியரசு, ஜனநாயகக் கட்சி இரண்டுமே அந்த சட்டமூலத்தை ஏகமனதாக ஏற்றுக்கொண்டன. அது நடப்புக்கு வந்தால் குறித்த சீன நிறுவனங்கள் தங்களது பங்குகளை அமெரிக்கப் பங்குச் சந்தையில் விற்பனைக்கு விடமுடியாது.

புதிய சட்டமூலம் அடுத்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் அங்கீகாரத்துக்கு அனுப்பப்படும். அங்கும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஜனாதிபதி ட்ரம்ப் அதில் கையெழுத்திட்டுச் சட்டமாக்குவார்.

புதிய சட்டமூலத்தின்படி பங்குகளை விற்பனைக்கு விடும் நிறுவனங்கள், வெளிநாட்டு அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றனவா என்பதை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். வெளிநாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனமாக இருந்தாலும் அதைத் தெரிவிக்கவேண்டும்.

புதிய சட்டமூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்துக்குமே பொருந்தும். இருப்பினும், அது சீனாவை இலக்காகக்கொண்டே வரையப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு, நாளுக்குநாள் சீர்கெட்டு வரும்நிலையில் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து சீனா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றார்.

இதற்குப் பதிலடியாக சீனாவும் இதேபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாமெனப் பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...