வட்டவளை மௌன்ஜீன் தோட்டத்தில்அதிகரிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள்

மக்கள் ஒன்றிணைந்து தடுக்க வேண்டுமென கோரிக்கை

வட்டவளை மௌன்ஜீன் தோட்டத்தில் அண்மைக் காலமாக சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து வருவது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த வேளையில், இத்தோட்டத்தில் அமைந்துள்ள பாடசாலை வளவுக்குள் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தமது பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து கவலையடைவதாக இத்தோட்ட மக்கள் தெரிவித்தனர். சட்டவிரோத செயற்பாடொன்று ஆரம்பமாகும் முன்னரே அதனை ஆரம்பத்தில் தடுக்காவிட்டால் பின்னர் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். இதனால் தமது பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமென பெற்றோர் அஞ்சுகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் உச்சத்தில் இருந்த காலத்தில் இப்பாடசாலை மூடப்பட்டிருந்த வேளையிலேயே அங்கு கசிப்பு உற்பத்தி இடம்பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

பாடசாலையின் நிர்வாகம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு அதிபர் சென்றிருந்த போது பாடசாலையின் வளைவினுள்ளே துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் அதிபர் அப்பகுதியெங்கும் தேடுதல் நடத்திய போது பாடசாலைக்கு பிரதானமாக குடிநீர் விநியோகிக்கும் தாங்கியிலிருந்தே துர்நாற்றம் வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின்னர் அந்தத் தாங்கியை பரிசோதித்துப் பார்த்த போது சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டமை தெரியவந்தது. அதனாலேயே அங்கிருந்து துர்நாற்றம் வீசியமை தெரியவந்தது. பின்னர் இது குறித்து அதிபர் வட்டவளை பொலிசாருக்கு முறையிட்டதன் பின்னர் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இவ்விடயம் குறித்து பாடசாலையின் அதிபர் விபரித்ததாவது;

கொரோனா விடுமுறைக் காலத்தில் மவூண்ட்ஜீன் பாடசாலையில் மாணவர்களுக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தாங்கியை கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தியிருப்பது மிகவும் மனவேதனை தருகிறது. இது மனித விழுமியங்களுக்கு அப்பாற்பட்ட செயலாகும்.எனவே பாடசாலை அதிபர் என்ற வகையில் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

அது மாத்திரமல்லாமல் இப்படியான தகாத செயற்பாடுகளை செய்வதற்காக நீர்த்தாங்கியில் உள்ள நீர்க் குழாய்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை என்பது நற்பிரஜைகளை உருவாக்கும் இடமாகும். இப்படியான புனிதமான இடத்தில் தகாத செயற்பாடுகளை செய்பவர்களை இனங்கண்டு அவர்களை சமூகத்திலிருந்து அப்புறப்படுத்த பெற்றோர்களும் பழைய மாணவர்களும் ஒன்றிணைந்து செய்பட வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன்”.

இவ்வாறு அதிபர் தெரிவித்தார்.

வட்டவளை மௌன்ஜீன் தோட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது பொலிசாரின் கைகளில் மட்டுமன்றி பொதுமக்களின் கைகளிலும் தங்கியுள்ளதென்று இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இரா.யோகேசன்
கினிகத்தேனை தினகரன் நிருபர்

 

 

 

 


Add new comment

Or log in with...