திருப்பதியில் ஒன்லைன் உண்டியல் மூலம் ரூ.1.97 கோடி வசூல்

திருப்பதியில் ஒன்லைனில் உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கையாக ஏப்ரல் மாதத்தில் செலுத்திய பணம் ரூ.1.97 கோடி வசூலாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கால் திருப்பதியில் பக்தர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டாலும், தினசரி நடக்கும் பூஜைகள் எவ்வித குறையுமின்றி நடந்து வருகிறது.

3-ம் கட்ட ஊரடங்குக்கு பின்னர் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் மேலும் ஊரடங்கு 31-ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதனால் திருப்பதியில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. 31ம் திகதிக்கு பின்னர் தளர்வுகளை வழங்கியபின் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

திருப்பதி கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டாலும், தேவஸ்தான உறுப்பினர்கள், முக்கிய ஊழியர்கள், பாதுகாப்பு படையினர் தரிசனம் பெற்று வருகின்றனர்.

அவ்வாறு தரிசனம் மூலம் தினசரி 10 ஆயிரம், 20 ஆயிரம் என உண்டியல் வசூலாகி வருகிறது. இதில் அதிகபட்சமாக ஒரே நாளில் ரூ.2 இலட்சம் கிடைத்துள்ளது.

திருப்பதியில் ஒன்லைனில் உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கை பணம் செலுத்தும் முறை உள்ளது.

அவ்வாறு பக்தர்கள் ஏப்ரல் மாதத்தில் செலுத்திய பணம் ரூ.1.97 கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.1.79 கோடி வசூலாகியிருந்தது. இந்த ஆண்டு ரூ. 18 இலட்சம் கூடுதலாக வசூலாகியுள்ளது. கொரோனா ஊரடங்கில் பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியாத நிலையில் இ-உண்டியல் மூலம் பக்தர்கள் பணம் செலுத்தி வருகின்றனர்.


Add new comment

Or log in with...