சீரற்ற காலநிலை; 10 மாவட்டங்களில் 18,430 பேர் பாதிப்பு

- 11 வீடுகள் முழுமையாகவும், 1,123 வீடுகள் பகுதியளவிலும் சேதம்

தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, 10 மாவட்டங்களில் 4,758 குடும்பங்களைச் சேர்ந்த 18, 430 பேர் பாதிக்கப்பட்டுள்ளளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் கடற்கரை பிரதேசத்தில் நிலவும் ‘அம்பன்’ சூறாவளியுடன் கூடிய கன மழை மற்றும்  காற்றுடனான காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலவுச்சரிவுகள் காரணமாக மேற்படி குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இவர்களில் 239 குடும்பங்களைச் சேர்ந்த 885 பேர் 17 தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், 508 குடும்பங்களைச் சேர்ந்த 1,942 பேர் தங்களது உறவினர்கள் வீடுகளில் உள்ளதாகவும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை, முல்லைத்தீவு, கண்டி, நுவரெலியா, பதுளை, அம்பாந்தோட்டை, காலி, மாத்தறை மாவட்டங்களிலுள்ள மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை தாக்கம் காரணமாக, 11 வீடுகள் முழுமையாகவும், 1,123 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. 


Add new comment

Or log in with...