வெளிநாட்டு கப்பற்றுறை வெற்றிடங்களுக்கு இலங்கையர்களை அனுப்புவதற்கான வாய்ப்பு

இத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி கவனம்

கொவிட் 19 நோய்த் தொற்றுடன் உலகின் முன்னணி நாடுகள் பலவற்றின் கப்பற்துறை கம்பனிகளில் ஏற்பட்டுள்ள ஊழியர் வெற்றிடங்களுக்கு இலங்கையர்களை அனுப்பக்கூடிய வாய்ப்பு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.

தெற்கு கடல் மார்க்கமாக கிழக்கிற்கும் மேற்கிற்கும் பயணம் செய்யும் உலக நாடுகளின் கப்பல்களில் சேவையில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களுக்கு காலி துறைமுகத்தின் ஊடாக நாட்டிற்குள் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளிச்செல்லவுமான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டது. 

நாட்டின் முக்கிய கப்பற்றுறை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று முன்தினம் பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த விடயங்கள் குறித்து கருத்துக்களை பரிமாரிக்கொண்டார்.

காலி துறைமுகத்திற்கு 10 கடல் மைல் தூரத்திலுள்ள கடற்பரப்பில் 300 க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்கள் தினமும் பயணிப்பதாக கம்பனிகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். அக்கப்பல்களில் சேவையில் ஈடுபட்டுள்ள ஏனைய நாடுகளின் பணிக்குழாமினருக்கும் இலங்கையிலிருந்து தமது நாடுகளுக்கு பயணம் செய்யும் வசதிகளை செய்துகொடுப்பதன் மூலம் பெருமளவு அந்நியச் செலாவணியை சம்பாதிக்கும் வாய்ப்புள்ளது. ஸ்ரீலங்கன் விமானச் சேவையை மேம்படுத்தவும் இதனை பயன்படுத்திக் கொள்ள முடியுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

காலி துறைமுகத்தை 'சர்வதேச கப்பல் பணிக்குழாம் பரிமாற்ற மையமாக' அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது. சுகாதார சட்டதிட்டங்களுக்கமைய இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய வாய்ப்பு குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.


Add new comment

Or log in with...