சூப்பர் புயலாக மாறுகிறது அம்பன் 5 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு | தினகரன்


சூப்பர் புயலாக மாறுகிறது அம்பன் 5 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அம்பன் புயல் அதிதீவிரமடைந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருவதால், 5 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருவானது. ‘அம்பன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தெற்கு வங்கக்கடலில் அதிஉச்ச உயர் தீவிர புயலாக மாறியுள்ளது. காலையில் சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டிருந்தது.

புயல் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்திற்குள் சூப்பர் புயலாக மாறும் என்றும், மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அம்பன் புயல் காரணமாக புயலால் ஒடிசா, மேற்குவங்காளம், சிக்கிம், அசாம், மேகாலயாவில் மே 21 வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஒடிசாவின் வடக்கு பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்பதால் அதிக சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் நிலையை சமாளிக்க பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

புயல் பாதிப்பு தீவிரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருப்பதால், பிரதமர் மோடி நேற்று மாலை 4 மணிக்கு உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

சூப்பர் புயலாக மாறும் அம்பன் புயல், மேற்கு வங்காளத்தின் சாகர் தீவுகள் மற்றும் வங்காளதேசத்தின் ஹதியா தீவுகள் இடையே மே 20ம் திகதி மதியம் அல்லது மாலையில் கடந்து செல்லும். இதன் காரணமாக மே 19 முதல் கடலோர ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் மிக கனமழை மழை பெய்யும். மே 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் வடக்கு வங்காள விரிகுடாவில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.


Add new comment

Or log in with...