நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள்; ரணில் உட்பட 19 பேருக்கு எதிராக விசாரணை

பதில் பொலிஸ் மாஅதிபர் உறுதியளித்ததாக தெரிவிப்பு

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முன்னாள் அமைச்சர்கள் 19 பேருக்கு எதிராக செய்யப்பட்ட நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் குறித்து விரைவில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென பதில் பொலிஸ் மாஅதிபர் உறுதியளித்துள்ளார்.

அரசாங்கத் தரப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று இந்த தகவலை ஊடகங்களுக்கு  வெளியிட்டார்.

  இந்த நிதி மோசடி குற்றச்சாட்டுகள் மூடி மறைக்கப்பட்டிருப்பதாக  தான் பதில் பொலிஸ் மா அதிபரிடம் இரு தினங்களுக்கு முன்பாக அவரை நேரடியாக சந்தித்து கேட்டபோது பதில் பொலிஸ் மாஅதிபர் மேற்கண்டவாறு தெரிவித்ததாக மஹிந்தானந்த அலுத்கமகே குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள்  அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, ரவி கருணாநாயக்க, டொக்டர் ராஜித சேனாரத்ன, தலதா அத்துகோரல, பீ ஹரிசன், அஜித் பீ பெரெரா, ஹெக்டர் அப்புஹாமி உட்பட 19 பேருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டை நிதிக்குற்றவியல் பொலிஸ் பிரிவில் செய்யப்பட்டுள்ளது. இக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இதுவரை எந்தவிதமான விசாரணை களும் முன்னெடுக்கப்படவில்லை. இது குறித்து எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாக சந்தித்து விளக்கம் கேட்டேன்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தாமதமின்றி மிக விரைவில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென அவர் என்னிடம் உறுதியளித்தார்.

இந்த முன்னாள் அரசியல் பிரமுகர்கள் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் உயர் அமைச்சுப் பதவி பொறுப்புக்களை வகித்தவர்கள் அவர்களுக்கு எதிரான இந்த நிதி மோசடி குற்றச்சாட்டுகள் பொலிஸ் தரப்பினால்  கிடப்பில் போடப்பட்டிருப்பதாக பதில் பொலிஸ் மாஅதிபரிடம் சுட்டிக்காட்டிய போது அது குறித்து தான் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

முதலில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசில் அங்கம் வகித்த சுஜீவ சேனசிங்க, அஜித் பி பெரேரா, ஹெக்டர் அப்புஹாமி  ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் மாஅதிபர் உறுதியளித்திருக்கிறார்.  இந்த முறைப்பாடுகள் விசாரிக்கப்படாமல்  மூடி மறைக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டமை  தொடர்பில் உள்ளக விசாரணை ஒன்றை  இருப்பதாகவும் அதில் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்திருக்கிறார்.

எம்.ஏ.எம் நிலாம்


Add new comment

Or log in with...