வரலாறு தெரியாவிட்டால் சுமந்திரனுக்கு வகுப்பெடுக்க தயாராக உள்ளோம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் சம்பந்தமான வரலாறு தெரியாவிட்டால் சுமந்திரன் எம்மிடம் வந்தால் அவருக்கு வகுப்பு எடுக்கத் தயாராக இருக்கின்றோம். நவீன வசதிகள் தற்போது இருப்பதனால் காணொளி மூலமாகவும் பதிலளிக்கத் தயாராக இருக்கிறோம். பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பதான்    சுமந்திரன் நடந்துகொண்டிருக்கின்றார் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டினார்.

விடுதலைப் போராட்டம் தொடர்பில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு தமிழ் தேசிய கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பதனை யாரும் தடுக்க முடியாதென தந்தை செல்வா கூட சொல்லியிருந்தார். அதை இலங்கை அரசாங்கம் கூட மறுக்க முடியாது. சுமந்திரன் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தான் நடந்துகொண்டிருக்கின்றார்.

தற்செயலாக, வாய் தடுமாறி சொல்பவர் அல்ல. அவர் ஒரு புகழ்பூத்த சட்டத்தரணி. அதுவும் ஜனாதிபதி சட்டத்தரணி. ஆனால் அந்த சட்டத்தரணி இனத்திற்கு என்ன செய்தார் என்பதற்கு அதன் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் தெரியும். 2006 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்ட போது ரெலோ இயக்கம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

அந்த மனுவைத் தாக்கல் செய்தவர் சட்டத்தரணி சுமந்திரன். அந்த வழக்கில் நீதிபதிகளுக்குப் பயந்து அந்த வழக்காளிகளிற்கு தெரியாமல் மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டவர் தான் நண்பர் இந்த சாட்சாத் சுமந்திரன்.

தமிழரசு கட்சி சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாரா?.

ஆனால் தமிழரசு கட்சி எந்த ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் எடுக்காது. ஆகக்குறைந்தது ஊடகப் பேச்சாளர் பதவி சரி பறிப்பார்கள் என சிலர் நினைப்பார்கள். ஆனால் அந்தப் பதவி கூட பறிக்கப்படமாட்டாது.

ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருப்பவர்கள் பலர் தனிப்பட்ட முறையிலும், வேறு பல காரணங்களினாலும் சுமந்திரனிடம் கடமைப்பட்டுள்ளார்கள். சுமந்திரனிடம் இருந்து ஒரு சிறு துரும்பைக் கூட இவர்களால் அசைக்க முடியாது.

தமிழரசுக் கட்சிக்கு முதுகெலும்பு இருக்கின்றதா?. நாங்கள் சவால் விடுக்கின்றோம், சுமந்திரனுக்கு எதிராக இவர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

ஆகவே தமிழர் விடுதலைப் போராட்டத்தில் இறுதிக் காலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் எவ்வளவு உயிர்கள் பறிக்கப்பட்ட பின்னரும் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஏனைய தலைவர்கள் எவ்வாறு ஒரு அரங்கில் வரப்போகின்றீர்கள்?.

ஆகவே இதற்குரிய தெளிவான விடைகள் தெரியவேண்டும் அல்லது  மக்கள் மத்தியிலிருந்து விடைகள் கிடைக்க வேண்டும்.

இலங்கை தமிழரசு கட்சியாக இருக்கட்டும், தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருக்கட்டும் இதற்குரிய விடையைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்றார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...