அடையாள அட்டை ஒரு நாள் சேவை தொடர்ந்தும் இடைநிறுத்தம்

அடையாள அட்டை ஒருநாள் சேவை தொடர்ந்தும் நிறுத்தம்-NIC One Day Service Continue to Be Temporarily Suspended

- அவசர தேவைக்கான அடையாள அட்டைகளை விரைவாக விநியோகிக்க நடவடிக்கை
- க.பொ.த. சாதாரண மாணவர் விண்ணப்பங்களை விரைவாக அனுப்பி வைக்கவும்

ஒரு நாள் சேவை அடையாள அட்டை விநியோகம் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என, ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் கொவிட்-19 தொற்று நிலை காரணமாக கடந்த மார்ச் 16ஆம் திகதி ஒரு நாள் சேவை தேசிய அடையாள அட்டை விநியோகம் இடைநிறுத்தப்பட்டது. ஆயினும் இது வரை, தொற்றுநிலை ஆபத்து முற்றுமுழுதாக நீங்காத நிலையில், பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் வகையிலான, அடையாள அட்டை விநியோக ஒருநாள் சேவையை தொடர்ந்தும் இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆயினும், பரீட்சை நடவடிக்கைகள், நேர்முகத் தேர்வு நடவடிக்கைகள், சாரதி அனுமதிப்பத்திரம் பெறுதல், கடவுச்சீட்டு பெறுதல் உள்ளிட்ட  அத்தியாவசிய தேவைகளுக்காக, தேசிய அடையாள அட்டைகளை விரைவாக பெற வேண்டிய தேவைகளை கொண்டவர்களுக்காக, அடையாள அட்டைகளை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை, பிரதேச செயலகம் ஊடாக வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அவ்வாறான தேவையுடையவர்கள் தங்களது விண்ணப்பங்களை, கிராம சேவகர் ஊடாக உறுதிப்படுத்தி, தங்களது விண்ணப்பப்படிவங்களை பிரதேச செயலகத்தின் அடையாள அட்டை பிரிவுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்கள், குறித்த சேவையிலுள்ள அதிகாரிகளால், ஆட்களை பதிவு செய்யும் தரவுத் தளத்தில் உள்ளீடு செய்யப்பட்டு, உரிய அடையாள அட்டைகளை விரைவாக தயாரித்து தபால் மூலம் உரிய விண்ணப்பதாரிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆயினும் மார்ச் 16ஆம் திகதிக்கு முன், ஒரு நாள் சேவையின் கீழ் அடையாள அட்டைகளை பெறுவதற்காக விண்ணப்பப்படிவங்களை தயார் செய்து வைத்துள்ள அனைவரும், தங்களது விண்ணப்பப்படிவங்களை தொடர்ந்தும் தம் வசம் வைத்திருக்காது, பிரதேச செயலகத்தின் அடையாள அட்டை பிரிவுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சாதாரண சேவையின் கீழ் அனுப்பப்படும் விண்ணப்பப்படிவங்களை, கிராம சேவகர் ஊடாக ஆட்பதிவுத்த திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என்பதோடு, குறித்த தேசிய அடையாள அட்டைகளும் குறைந்த காலத்திற்குள் விரைவாக வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வருடாந்தம் இடம்பெறுவது போன்று இவ்வருடமும் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை மாணவர்களின் விண்ணப்பப்படிவங்களை அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது, ஆயினும் இது வரை அவ்விண்ணப்பங்களை அனுப்பி வைக்காத அனைத்து பாடசாலைகளும், உரிய பிரதேச செயலகங்களுக்கு அல்லது மாகாண அலுவலகங்களுக்கு அல்லது பிரதான அலுவலகங்களுக்கு மிக விரைவாக அவற்றை அனுப்பி வைக்குமாறு, ஆணையாளர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...