ஆசன எண்ணிக்கைக்கு அமைய பஸ், புகையிரத போக்குவரத்து

ஆசன எண்ணிக்கைக்கு அமைய பஸ், புகையிரத போக்குவரத்து-Bus and Train Services Begin According to Number of Seats per Passenger

கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை முதல் அமுல்

கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை (13) முதல் பஸ்கள், புகையிரதங்களின் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய போக்குவரத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களிலும் தனியார் மற்றும் இ.போ.ச. பஸ்கள், புகையிரதங்கள் மூலமான பயணிகள் போக்குவரத்திற்கு இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சேவையை ஒழுங்கமைத்தல் தொடர்பில், அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இன்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைய இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அரச மற்றும் தனியார் துறைகளில் சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்களது வேலைத் தலத்திற்கு செல்வதற்கு மாத்திரம் இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நடைமுறையின் கீழ், சாதாரண பொதுமக்களுக்கு அத்தியாவசிய சேவைகளுக்காக செல்வதற்கு மாத்திரம் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகின்ற போதிலும், தேவையற்ற பயணங்களுக்காக பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்த வேண்டாமென, அமைச்சர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறிப்பாக ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய, புகையிரத சேவைகளை வழங்குவதில் தொழில்நுட்ப சிக்கல்கள் காணப்படுகின்றதா என, அமைச்சர் இதன்போது வினவியபோது, அவ்வாறான பிரச்சினைகள் இல்லை எனவும், டிக்கெட்டுகளை வழங்குதல் நாளை முதல் ஆரம்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புகையிரதங்களிலும் ஆசன எண்ணிக்கைக்கு அமைய போக்குவரத்து மேற்கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பஸ்கள் மற்றும் புகையிரதங்களில் பயணிக்கும்போது முகக்கவசம் அணிவது உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பது கட்டாயம் என, தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, சுகாதார நடைமுறைகளை பேணாதவர்களை பஸ்கள், புகையிரதங்களில் அனுமதிக்காதிருக்கவும் இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து பயணிகளும் பஸ்களின் பின்புற கதவினால் நுழைந்து, முன்புற கதவினால் இறங்க வேண்டும் என்பதோடு, அனைத்து பஸ்களிலும் கிருமிநீக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் பஸ் தரிப்பிடங்களில் கை கழுவுவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் நாளை முதல், புகையிரத பருவச்சீட்டு இல்லாத பயணிகளுக்கு டிக்கெட்டுகளை வழங்கும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, இதன்போது, தாம் பணிபுரியும் நிறுவனத்தின் சேவை அடையாள அட்டையை காண்பிப்பது கட்டாயமாகும் என, அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்று நிலையை இல்லதொழிப்பது தொடர்பில் சுகாதாரப் பிரிவினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய, அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த விடயங்களுக்கு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் என,
சாதாரண பொதுமக்களுக்கு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு சில அரச ஊழியர்கள் பொதுப் போக்குவரத்து வசதிகளின்றி இருப்பதாக, ஒரு சில ஊடகங்கள் காண்பிக்கின்ற போதிலும் அவ்வூழியர்கள் மாவட்டத்திலிருந்து மாவட்டத்திற்கு அல்லது உரிய முறையில் புகையிரதங்கள் அல்லது பஸ்களில் முறையாக பயணிக்க அனுமதி பெறாதவர்கள் என்பது தெளிவாகின்றது. ஒரு சில இடங்களில் சிறு சிறு குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், இ.போ.ச. பஸ்கள் மூலம் நேற்று (11) மிகவும் பாராட்டத்தக்க சேவை வழங்கப்பட்டுள்ளது என நம்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.

அண்மைக் காலமாக பஸ் உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் தொடர்பில் தனியார் பஸ் சங்கங்கள் இதன்போது  தெரிவித்தன. இது தொடர்பாக அமைச்சரவைக்கு அறிவித்து,  அது தொடர்பில் தெளிவூட்டுவதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது தெரிவித்தார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அனைத்து போக்குவரத்து சேவைகளும் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...