கொரோனா வைரஸில் திடீர் மரபணு மாற்றங்கள்! | தினகரன்

கொரோனா வைரஸில் திடீர் மரபணு மாற்றங்கள்!

தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பின்னடைவு ஏற்படுமா?

அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸின் நூற்றுக்கணக்கான திடீர் மரபணு மாற்றங்களை அடையாளம் கண்டுள்ளனர்.

ஆனால், கொரோனா வைரஸின் இந்த நூற்றுக்கும் அதிகமான திடீர் மரபணு மாற்றங்களுக்கும் அதன் பரவும் தன்மைக்கும், அது தடுப்பூசி கண்டறிவதில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் இதுவரை நிறுவப்படவில்லை.

திடீர் மரபணு மாற்றம் அடைவது வைரஸின் இயல்பு ஆகும்.

ஆனால் இந்த மாற்றங்களுக்கும், கொவிட்-19 நோயின் வீரியம் தீவிரமடைவதற்கு அல்லது தொற்று பரவும் விதத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

கொவிட்-19 வைரஸின் புதிய மரபுப் பிறழ்வான டி614ஜி ஆதிக்க நிலையை அடைந்து வருவதாகவும், இது நோய்த் தொற்று பரவலை மேலும் மோசமாக்கும் என்றும் இது தொடர்பாக அமெரிக்காவில் நடைபெற்று வரும் முதற் கட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

எனினும், இந்த ஆய்வு முடிவுகள் பரந்துபட்ட அறிவியல் உலகின் மற்ற ஆராய்ச்சியாளர்களால் உற்றுநோக்கப்படவும் இல்லை, முறையாக பதிப்பிக்கப்படவும் இல்லை.

அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள லொஸ் அலமோஸ் தேசிய ஆய்வகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், வைரஸின் தனித்துவமான வடிவத்தில் ஏற்படும் மாற்றங்களை தரவுத்தளத்தைப் பயன்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

இந்த குறிப்பிட்ட வைரஸ் மரபுப் பிறழ்வு மற்றவற்றை விட வேகமாக வளர்வதற்கு ஏதாவது காரணம் இருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து இதுவரை தெளிவில்லை.

பிரிட்டனிலுள்ள நோயாளர்களைக் கொண்டு இந்த பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. வைரஸின் அந்த குறிப்பிட்ட பிறழ்வுள்ள நபர்களின் மாதிரிகளில் அதிக அளவு வைரஸ் இருப்பதாக அவர்கள் கண்டறிந்தாலும், அதன் காரணமாக நோயாளிகள் நோய்வாய்ப்பட்டதற்கான அல்லது நீண்ட காலம் மருத்துவமனையில் தங்கியிருந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

யூனிவர்சிற்றி கொலிஜ் லண்டன் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், கொவிட்-19 வைரஸின் 198 விதமான பிறழ்வுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். “வைரஸ்களில் மரபுப் பிறழ்வுகள் என்பது ஒரு மோசமான விடயம் அல்ல. அதேசமயத்தில், இந்த பிறழ்வுகளை மையமாகக் கொண்டு கொரோனா வைரஸ் எதிர்பார்த்ததை விட வேகமாக அல்லது மெதுவாக மாறுகிறது என்ற முடிவுக்கும் வர முடியாது” என்று அந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்களில் ஒருவரான பேராசிரியர் ஃபிராங்கோயிஸ் பலூக்ஸ் கூறுகிறார்.

“தற்போதுள்ள சூழ்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதற்கான மற்றும் உயிரைப் பறிப்பதற்கான ஆபத்து அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்று கூற முடியாது” என்கிறார் அவர்.

கொரோனா வைரஸின் மரபுப் பிறழ்வுகள் குறித்து கிளாஸ்கோ பல்கலைக்கழகம் பகுப்பாய்வு செய்தது. தற்போது உலகம் முழுவதும் ஒரே வகை வைரஸ் மட்டுமே பரவுகிறது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

வைரஸின் கட்டமைப்பில் ஏற்படும் மிகச் சிறிய மாற்றத்தையும் கண்காணிப்பது அவசியம். ஏனெனில், அது தடுப்பு மருந்து உருவாக்கத்தில் தாக்கத்தைச் செலுத்தக் கூடும்.அதாவது, ஒருவேளை தற்போது பரவும் கொரோனா வைரஸின் ஒரு குறிப்பிட்ட பிறழ்வுக்கு தடுப்பு மருந்து கண்டறியப்பட்ட பிறகு, அதன் வடிவம் மாறிக் கொண்டே இருந்தால் அப்போதெல்லாம் தடுப்பு மருந்திலும் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும்.

தற்போது ஆராய்ச்சி நிலையில் உள்ள பல கொவிட்-19 தடுப்பு மருந்துகள் அந்த வைரஸின் தனித்துவமான கூர்முனைகளை குறி வைக்கின்றன. அதாவது, கொரோனா வைரஸின் தனித்துவமான கூர்முனைகளை மனிதனின் உடல் கண்டறிய செய்து அதை எதிர்த்து போராடும் திறனை அளிக்கும் வகையில் தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.ஆனால் அந்த கூர்முனையின் அமைப்பு மாறினால், இந்த வழியில் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் குறைவான செயல்திறன் மிக்கதாக மாறும்.

இந்த நேரத்தில் இது எல்லாம் தத்துவார்த்தமானது. வைரஸின் மரபணுவில் நடக்கும் மாற்றங்கள் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதைக் கூறுவதற்கு ஆராய்ச்சியாளர்களிடம் இன்னும் போதுமான தகவல்கள் இல்லை.

“வைரஸின் எண்ணற்ற மரபணுக்களை பகுப்பாய்வு செய்வது தடுப்பு மருந்து கண்டறிவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றும்” என்று கூறுகிறார் இந்த ஆய்வை முன்னெடுத்த யூனிவர்சிட்டி கொலிஜ் லண்டனின் மற்றொரு ஆய்வாளரான லூசி வான் டார்ப்.(பி.பி.சி)

 

 


Add new comment

Or log in with...