சாதாரண பயணிகளுக்கு பொது போக்குவரத்தில் அனுமதியில்லை | தினகரன்


சாதாரண பயணிகளுக்கு பொது போக்குவரத்தில் அனுமதியில்லை

மேலும் இரு வாரங்களுக்கு கட்டுப்பாடு

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு, அரசாங்க மற்றும் தனியார் துறைகள் கட்டுப்பாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டாலும், இரண்டு வாரங்களுக்கு சாதாரண பொதுமக்களுக்கு பொது போக்குவரத்து சேவைகளை வழங்குவதை தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மின்சக்தி, வலுசக்தி மற்றும் போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொது போக்குவரத்து சேவைகளை நடாத்திச் செல்வது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன்,  நேற்று (09)  அமைச்சர் கலந்தாலோசித்தபோதே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (11) தளர்த்தப்பட்டவுடன் சாதாரண பொதுமக்கள் தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபடலாம் என்பதற்காக, குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சினால் இ.போ.ச. பஸ் சேவையும், புகையிரத திணைக்களத்தினால் போக்குவரத்து வசதியும் வழங்கப்படும்போது, அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மாத்திரம் போக்குவரத்து வழங்கப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புகையிரத கட்டளைச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு, புகையிரதத்தில் அல்லது, ஜன்னல் வழியாக புகையிரத பாதையில் துப்புதல் தண்டனைக்குரிய குற்றமாகுமென்று பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள போதும், அரசாங்க மற்றும் தனியார் துறைகள் பணிகளை ஆரம்பிக்கும் பொருட்டு  கொழும்பிற்கு வருவதற்காக 10 புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் டிலந்த பெனாண்டோ தெரிவித்தார். 
 


Add new comment

Or log in with...