கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கைக்கு வர முடியாமல், லண்டன் நகரில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட 207 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான விசேட விமானம் இன்று (04) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
லண்டன் நகரிலுள்ள ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 504 எனும் விமானம், மாணவர்களுடன் நாட்டை வந்தடைந்துள்ளது.
இவ்வாறு வருகை தந்த மாணவர்களும் அவர்களின் பயணப் பொதிகளும் இராணுவத்தினரால் தொற்றுநீக்கம் செய்யப்பட்டதோடு, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அவர்கள் இராணுவத்தினரால் பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு வருகை தருவதற்கு எதிர்பார்த்து, லண்டன் நகரில் காத்திருக்கும் மற்றுமொரு மாணவர் குழுவினரை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான மற்றுமொரு விசேட விமானம், இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
இவ்விமானம், இன்று முற்பகல் 10.40 மணிக்கு லண்டன் நகரிலுள்ள ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடையவுள்ளது.
Add new comment