பிரதமரின் கூட்டம் அலரி மாளிகையில் இடம்பெறுகிறது

பிரதமரின் கூட்டம் அலரி மாளிகையில் இடம்பெறுகிறது-Mahinda Rajapaksa on Meeting with Fmr MPs at Temple Trees-UNP SJB JVP Boycott

- ஐ.தே.க., ஜே.வி.பி., ஐ.ம.ச, பங்கேற்கவில்லை
- தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கேற்பு

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் மற்றும் முன்னாள் எம்.பி.க்களுக்கு இடையே விடுக்கப்பட்ட கலந்துரையாடல் தற்போது அலரி மாளிகையில் இடம்பெற்று வருகின்றது.

கொவிட்19 தொடர்பான தற்போதைய மற்றும் எதிர்கால நிலைமை தொடர்பில் இதன்போது அரச புலனாய்வு மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரால் இதன்போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதில், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், சுகாதார பிரிவினர், பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட, கொவிட்19 ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இக்கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இதில் கலந்து கொள்ளவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே பங்குபற்றுவதாக அறிவித்திருந்த நிலையில் நேற்றையதினம் (03) தாமும் பங்குபற்றப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தது.

எவ்வித அர்த்தமும் அற்ற இவ்வாறான கூட்டங்கள் மூலம் நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நிலைமையில் ஒன்றுபட்ட தலைமைத்துவம் அவசியமான நேரத்தில் ராஜபக்‌ஷ குழுவினர் கட்சி அரசியலை மேற்கொண்டு வருவதாக, அறிக்கையொன்றை விடுத்துள்ள அக்கட்சி இவ்வாறு தெரிவித்திருந்தது.

இதேவேளை, பழைய பாராளுமன்றமும் அதன் உறுப்பினர்களும் வேண்டாம் என கூறியவர்கள் தற்போது 225 பேரையும் அழைத்துள்ளதாக தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி மற்றும், ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன அரசியலமைப்பு பலம் கொண்ட பாராளுமன்றத்தில் கூடி உரிய தீர்மானம் எடுக்காமல் இவ்வாறான கூட்டங்களை கூட்டுவதில் எந்தவித பலனும் இல்லை எனத் தெரிவித்து இக்கூட்டத்தை பகிஷ்கரித்துள்ளன.

எவ்வாறாயினும், இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் எம்.பிக்கள். உள்ளிட்டோடர் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...