போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது | தினகரன்


போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

மொரட்டுவை, லுனாவ பிரதேசத்தில் போலி நாணயத்தாள் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்தோடு, போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்காக உதவி புரிந்த குற்றச்சாட்டில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

நேற்று (02) காலை, மொரட்டுவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டபோது, 5,000 ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள் மற்றும் 120 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய, குறித்த போலி நாணயத்தாளை வழங்கிய மற்றுமொரு சந்தேகநபர், 5,000 ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் இரண்டு மற்றும் 02 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு இரண்டாவது சந்தேகநபரின் தெற்கு மொரட்டுமுல்லவில் உள்ள வீட்டைச் சோதனைக்கு உட்படுத்தியபோது, போலி நாணயத்தாளை அச்சடிக்கும் இயந்திரம் மற்றும் அதற்குத் தேவையான உதிரிப் பாகங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து, போலி நாணயத்தாளை அச்சிடுவதற்காக உதவி புரிந்த மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

மொரட்டுவை, மொரட்டுமுல்ல பிரதேசங்களைச் சேர்ந்த 22, 31, 40 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இச்சந்தேகநபர்களை இன்றையதினம் (03) மொரட்டுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக மொரட்டுவை பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 


Add new comment

Or log in with...