ஒரு நாட்டையே வழி நடத்தும் ஆசிரியன் பத்திரிகையே! | தினகரன்

ஒரு நாட்டையே வழி நடத்தும் ஆசிரியன் பத்திரிகையே!

- இன்று உலக பத்திரிகை சுதந்திர நாள்: மே 03
- சுதந்திரமாக உள்ளதை உள்ளபடி வெளியிடுவதே பத்திரிகை சுதந்திரம்

பத்திரிகை நிறுவனங்கள், அல்லது ஊடக நிறுவனங்கள் செய்திகளை, கருத்துக்களை சுதந்திரமாக எவ்வித அச்சுறுத்தல்களும் தடைகளுமின்றி உள்ளதை உள்ளபடி மக்களுக்கு வெளியிடுவதை பத்திரிகை சுதந்திரம் என்று வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது.

ஐ.நா.வினால் பிரகடனம்
ஐக்கிய நாடுகள் சபையால் 2020ஆம் ஆண்டிற்கான தொனிப்பொருளாக பத்திரிகைகள் பக்கசார்பின்றியும் யாருக்கும் அஞ்சாத வகையில் செயற்படுதல் வேண்டும். உலக பத்திரிகை சுதந்திர நாள் என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் 'மனித உரிமைகள் சாசனம்' பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஒரு நாட்டையே வழி நடத்தும் ஆசிரியன் பத்திரிகையே!-World Press Freedom Day-May 03

பத்திரிகை சுதந்திர சாசனம்
ஆபிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே 'பத்திரிகை சுதந்திர சாசனம்' முன்வைக்கப்பட்டது. இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ  அமைப்பினால் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட, 'உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடகச் சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை' என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.

பத்திரிகைகளின் பிரதான பணி என்பது செய்திகளை அல்லது செய்திக் கட்டுரைகளை சேகரித்தல், எழுதுதல், தொகுத்தல், வெளியிடுதல் என்பவற்றை உள்ளடக்கியதாகும்.

யுனெஸ்கோ விருது
இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர பரிசு (UNESCO/Guillermo Cano World Press Freedom Prize) வழங்கிக் கௌரவிக்கின்றனர்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்
இவ்விருது கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா (Guillermo Cano Isaza) என்பவரின் நினைவாக வழங்கப்பட்டு வருகிறது. இவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றது.

நான்காவது தூண்
ஜனநாயகத்தின் 4 பிரதான தூண்கள் என்று சொல்லப்படுபவற்றில் நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, ஊடகங்கள் என 4ஆவது இடத்தில் ஊடகங்கள் வருகின்ற போதிலும், அதற்கு மேலுள்ள 3 தூண்களும் சரியாகச் செயற்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து, மக்களுக்கு அறிவிக்கும் முக்கியமான பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. ஊடகங்கள் என்று வரும்பொழுது வழக்கமான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் போன்ற ஊடங்களைத் தாண்டி இணைய செய்தித் தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் பகிரப்படும் தகவல்களும் ஊடகங்கள் என்ற வகைக்குள்ளேயே அடங்குகின்றன.

இலங்கை 127ஆவது இடம்; நோர்வே முதலிடம்
பத்திரிகைச் சுதந்திரம் உள்ள உலக நாடுகளின் தரப்படுத்தல் வரிசையில் இலங்கைக்கு இவ்வருடம் 127 ஆவது இடமும், கடந்த வருடம்  126 ஆவது இடமும் 2018 இல் 131  ஆவது இடமும் வழங்கப்பட்டுள்ளது.

2020 இல் ஊடக சுதந்திரம் உச்ச அளவில் உள்ள நாடாக நோர்வே தெரிவாகியுள்ளது. கடைசி இடமான 180 ஆவது இடத்துக்கு வட கொரியா தெரிவாகியுள்ளது.

அத்துடன் பல வருடங்களாக நோர்வே, பின்லான்ட், சுவீடன், நெதர்லாந்து ஆகிய நாடுகள் மாறி மாறி முதல் 3 இடங்களை பிடித்து வருவதோடு, கடந்த 4 வருங்களாக நோர்வே முதலிடத்தில் இருந்து வருகிறது.

ஊடகங்களுக்கு ஓரளவு சுதந்திரத்தை வழங்கக் கூடியதாக கருதப்படும் இலங்கை கடந்த 2015ஆம் ஆண்டு 165வது இடத்தில் காணப்பட்டது.

  • 2015 - 165
  • 2016 - 141
  • 2017 - 141
  • 2018 - 131
  • 2019 - 126
  • 2020 - 127

2015ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டில் 24 இடங்கள் முன்னேறி 141ஆவது இடத்திலிந்த இலங்கை, 2016இலிருந்து 2017இற்கு எந்தவித முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தவில்லை. எனினும் 2018 இல் 131 ஆவது இடத்தினை பெற்று முன்னேற்றம் கண்டுள்ளது. 2019ம் ஆண்டு 126வது இடத்தை பெற்றிருந்தது. 2020ம் ஆண்டு தரப்படுத்தலில் இலங்கை 180 நாடுகள் பட்டியலில் 127ஆம் இடத்தை பெற்றுள்ளது.

மூலங்கள்:
en.wikipedia.org/wiki/Press_Freedom_Index
rsf.org/en/ranking

தனித்துவம்
பத்திரிகைத் துறை என்பது ஒரு சமுதாயத்தை, ஒரு நாட்டையே வழி நடத்தும் ஆசிரியனாக, ஏணியாக திகழ வேண்டும். ஒரு தரமான பத்திரிகை, எந்த ஓர் தனித்துறைக்கும் தனிமுக்கியத்துவம் தரக்கூடாது. தனித்துவம் என்பதும், தனிமுக்கியத்துவம் என்பதும் முற்றிலும் எதிர்மறை நிலைகள். தனித்துவம் என்பது 'ஒரு ஈடுபாடு' என்பதே பொறுத்தமான நிலை. ஆனால் தனிமுக்கியத்துவம் என்பது ஒரு துறைசார்ந்த பத்திரிகையைக் குறிப்பதேயாகும்.

எடுத்துக்காட்டாக, கணினிப் பத்திரிகை, வணிகப் பத்திரிகை', தொழிற்ப்பத்திரிகை, 'அரசியல் பத்திரிகை' என்று பலவகைப் பத்திரிகைகள் இன்னாளில் பிரபலம் பெற்றுள்ளது.  எந்த துறைசார்ந்த பத்திரிகையைக்கும் வாசகர்கள் என்பது அந்த துறைசார்ந்த வல்லுனர்களே.  எனவே, ஒரு ஒட்டுமொத்த சமுதாயமே படிக்க வேண்டுமாயின், அது தினசரி பத்திரிகைக்குத்தான் சாத்தியம். அது ஒரு தினசரி பத்திரிகைக்கையின் பொறுப்பையும் அதிகரிக்கிறது.  அதாவது ஒரு தினசரி பத்திரிகை, மேற்கூறிய சமுகப்பொருப்புடன் பணியாற்றுவதற்கு அதன் நிறுவனருமே முழுப் பொறுப்பேற்றாக வேண்டும்.

உயிர்களை தியாகம் செய்தோரை நினைவுகூருவோம்
உலகின் பல நாடுகளிலே சமூக உறுதிப்பாட்டையும் விட பத்திரிகைச் சுதந்திரம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. பத்திரிகைகளின் பணி மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். சுதந்திரமாக கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும் சுதந்திரமாகப் பத்திரிகைகளை வெளியிடுவதற்கும் செய்திகளைச் சதந்திரமாக அடைவதற்கும் உலகிற்கு வாய்க்கப் பெற்ற ஒரு உரிமையைப் பாதுகாப்பதற்காகத் தங்களது உயிர்களைத் தியாகம் செய்தவர்களையும் நினைவுகூரும் தருணமாக இன்றைய தினம் அமைகிறது.

ஊடகவியலாளர்கள்
தற்காலத்தில் நிருபர்கள் தமது தகவல்களையோ அவை தொடர்பான கட்டுரைகளையோ மின்னணுத் தகவல் தொடர்புகள் மூலம் தொலை தூரங்களில் இருந்தே அனுப்புகிறார்கள். புதிய செய்திகள் உருவாகும்போது நிகழிடத்துக்குச் செல்லும் நிருபர்கள் தகவல்களை சேகரித்து உடனுக்குடன் ஊடக அலுவலகத்துக்கு அனுப்புவர், இவற்றை அடிப்படையாகக் கொண்டு செய்திகள் எழுதப்பட்டு வெளியிடப்படுகின்றன. வானொலி தொலைக்காட்சி நிருபர்கள் களத்திலிருந்தபடியே நேரடியாகத் தகவல்களைத் தருவதும் உண்டு. மேலும், 21ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சி ஊடகங்கள், நிகழ்வு நடைபெற்ற இடம் அல்லது செய்தி நடைபெறும் இடத்திற்கே சென்று, களத்தில் இருந்து நிருபர்கள் முலமாக தகவலை உடனுக்குடன் மக்கள் பெறும் வகையில் செயல்படுகின்றன. தற்போதுள்ள தொழில்நுடப் வளர்ச்சியின் காரணமாக, இணைய இதழியல், குறுஞ்செயலி வழியாக செய்திகளை உடனுக்குடன் பகிர்வது, என செய்தி துறை மற்றும் இதழியல் துறை வளர்ந்து கொண்டே செல்கிறது.

சுதந்திர சூழல்
இலங்கையைப் பொறுத்தவரை சுதந்திரமாக செய்திகள் சேகரிப்பதற்கும் சம்பவ இடங்களுக்கு சென்று உண்மை நிலவரத்தை ஆய்வு செய்யவும் பாதிக்கப்பட்ட மக்களிடம் உண்மைகளை கண்டறிய கூடிய ஒரு சூழல் காணப்படுகின்றது.  இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இலங்கையில் வெளியாகும் பத்திரிகைகளின் செய்திகளின் உண்மை தன்மை அதிகமாக பேணப்படுகின்றது. எவ்வாறாயினும் இலங்கையில் பத்திரிகை சுதந்திரம் என்பது பக்கச்சார்பின்றிய தன்மையில் காணப்படுகின்றமை முக்கியமான அம்சமாகும்.

லசந்த விக்ரமதுங்க படுகொலை
இலங்கையில் 2009ஆம் ஆ.ண்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்க அவர்களின் சாதனைகள் இன்றும் பேசப்படுகின்றன. அத்துடன் ஆரம்ப காலங்களில் எமது நாட்டில் பத்திரிகை துறையினர் மீது கொலை மிரட்டல், கடத்தல் நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பத்திரிகையாளருக்கு தனியான ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளமை சிறப்பம்சாமாகும்.

இலங்கை பத்திரிகைப் பேரவை
1973 ஆண்டு இலங்கை பத்திரிகைப் பேரவை ஆரம்பிக்கப்பட்டதுடன் பத்திரிகை பதிவு செய்தல்முக்கிய விடயமாக அமைந்துள்ளதுடன் பத்திரிகைகளின் சுதந்திரமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  பத்திரிகை பதிவு தொடர்பில் முறையான அரசநிறுவனம் இல்லாததினாலும், உயர்தொழில் நியமனங்களுக்கு அணுகூலமாக இலங்கைப் பத்திரிகைகளின் நல்லொழுக்கங்களை பாதுகாப்பதற்கும், இழிவான, தகுதியற்றபத்திரிகைகளை இல்லாதொழிப்பதற்கும் பத்திரிகை பதிவும் நடைபெறுகின்றது.

பத்திரிகை ஊடகச் சுதந்திரம் என்பது ஊடகங்கள் மிரட்டலும் தணிக்கையும் இல்லாமல் தகவலை வெளியிடுவதற்கான சுதந்திரம் ஆகும். ஊடகம் சமூகத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. வெவ்வேறு நாடுகளில் ஊடகச் சுதந்திரம் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. நோர்வே, கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஊடகங்கள் மிகச் சுதந்திரமாக இயங்குகின்றன. சீனா, ஈரான், வட கொரியா, கியூபா, இலங்கை ஆகிய நாடுகளில் ஊடகங்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. என்றாலும், நமது நாட்டிலும் நேர்மையுடனும் தர்மத்துடனும் பல பத்திரிகைகள் தற்போதும் செயற்பட்டு வருகின்றது  என்பதை குறிப்பிட வேண்டும். அத்தகைய நேர்மையான பத்திரிக்கையாளர்களை நினைவு கூறும் தினமாக போற்றுவோம்.

வி. பிரசாந்தன்
தலவாக்கலை


Add new comment

Or log in with...